அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர் எரிபொருள் வழங்கி வைப்பு

🕔 July 30, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் – தனது எரிபொருள் நிலையத்திலிருந்து நேற்று முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கி வைத்தார்.

அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி விடுத்த எழுத்துமூல வேண்டுகோளுக்கு அமைவாக – தவிசாளர் தாஹிர், பிரத்தியேகமாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் இவ்வாறு எரிபொருளை வழங்கினார்.

அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள் மற்றும் பிரதியதிபர்கள் என 41 பேருக்கு இவ்வாறு எரிபொருள் வழங்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களிடம் – அதிபர்கள் மற்றும் பிரதியதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட நிலையில், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கஸ்ஸாலி தமக்கு எரிபொருள் வழங்குமாறு நிந்தவூர் தவிசாளர் தாஹிரிடம் நேற்று முன்தினம் (28) எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை கருத்திற் கொண்டு, கல்வி சமூகத்தைக் கௌரவிக்கும் வகையில் – அவர்களுக்கான எரிபொருளை நேற்றிரவு தவிசாளர் தாஹிர் – முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியேகமாக வழங்கினார்.

இதேவேளை அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த சில ஆசிரியர்களுக்கும், அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு கோணாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கும் மற்றும் அப்பள்ளிவாசல் நிருவாகத்தினர் சிலருக்கும் தவிசாளர் தாஹிரின் எரிபொருள் நிலையத்தில் முன்னுரிமையின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது.

அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பல அதிபர்கள் – எரிபொருள் இல்லாமையினால் தமது கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு, சைக்கிளில் நீண்ட தூரம் பயணித்து வந்த நிலையில், அவர்களுக்கான எரிபொருளை தவிசாளர் தாஹிர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: பொதுமக்கள் ஆதங்கம்: நிந்தவூரில் முடியுமென்றால், ஏன் அட்டாளைச்சேனையில் முடியாது?

Comments