ஈராக் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர் : வெளியேறுமாறு பிரதமர் கோரிக்கை

🕔 July 28, 2022

ராக் நாடாளுமன்றத்தை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைப்பற்றியுள்ளனர். ஈராக்கிய மதகுரு முக்தாதா அல்-சதரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களே இவ்வாறு நாடாளுமன்றத்தை நேற்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியபோதிலும், அவர்கள் அவற்றினைத் தாண்டிச் சென்று நாடாளுமன்றத்தினுள் நுழைந்துள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அங்கிருக்கவில்லை என தெரியவருகிறது.

இந்த நிலையில் பிரதம மந்திரி முஸ்தபா அல்-காதிமி, அரசாங்கக் கட்டிடங்களிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களைக் கேட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் பாக்தாத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவியுள்ளனர். அங்கு தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் உள்ளன.

மதகுரு முக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள், பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களை கைப்பற்றி அதிக ஆசனங்களை பெற்றது.

எனினும் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது தொடர்பில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் காரணமாக இழுபறி நீடித்தது.

இந்த நிலையில் மொஹட் அல்-சுடானியின்  பெயர் பிரதமர் பதவிக்காக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு அல் சதருடைய ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து இதே போன்ற போராட்டத்தை நடத்தினர்.

Comments