தலைப்புச் செய்திகள்

பிரிட்டன் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று (07) ராஜிநாமா செய்தார்.

புதிய பிரதமர் வரும் வரை பிரதமர் பதவியில் – தான் நீடிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். ஒக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு முன்னதாக புதிய பிரதமர் பதவிக்கு வருவார்.

இன்று கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்; “நாடாளுமன்றத்தில் இருக்கும் கன்செர்வேடிவ் கட்சியினர் புதிய தலைவர் வேண்டும் என்று கூறிவிட்டனர். எனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான காலம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று கூறிய போரிஸ் ஜான்சன், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை தான் பதவியில் இருக்கப்போவதாக குறிப்பிட்டார்.

புதிய பிரதமருக்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.