சொற்களின் போர்

🕔 January 5, 2016

Article - 56 - 02
‘வி
வாதம் என்பது குரோதத்தினை வளர்த்து விடும்’ என்பார்கள். இன்னொருபுறம், ‘விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நேர், எதிர் விளைவுகள் இருக்கவே செய்கின்றன. விவாதம் புரிவதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை நினைத்து ஒதுங்கிப் போகின்றவர்களும் உள்ளனர். மறுபக்கம், ‘கூதலுக்குப் பயந்து குளிக்காமல் இருந்து விட முடியாது’ என்று சொல்லி, களத்தில் குதிப்போரும் இருக்கின்றார்கள்.

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கடந்த வாரம் ஆனந்த சாகர என்கிற இளம் பௌத்த பிக்கு ஒருவருடன், ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ என்கிற நேரடி நிகழ்வில் கலந்து கொண்டு விவாதித்தமை பற்றி அநேகமாக எல்லோரும் அறிவோம். இதுதான் கடந்த வாரம் சூடு தணியாத விவகாரமாகவும் இருந்தது. ‘வில்பத்து காட்டினை றிசாத் பதியுத்தீன் அழிக்கிறார், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்’ என்று குற்றம்சாட்டிய ஆனந்த சாகசர தேரருடன்தான், ஹிரு தொலைக்காட்சியில் நேரடியாக அமைச்சர் றிசாத் விவாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாதத்தின் பின்னணி

ஆனந்த சாகர எனப்படும் பௌத்த பிக்கு, தேசிய சங்க சபையின் செயலாளராக உள்ளார். அமைச்சர் றிசாத் பதியுத்தீன் – வில்பத்து காடுகளை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும், அங்குள்ள நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பதாகவும், மேற்படி பௌத்த பிக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.

இந்த நிலையில், கடந்த வாரம் – விகாரமகாதேவி பூங்கா அருகில் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. தேசிய சங்க சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது. அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 600 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வில்பத்து வனப்பகுதியை ‘அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அழிக்கின்றார், அங்குள்ள நிலங்களை ஆக்கிரமிக்கின்றார், போதைப்பொருள் வியாபாரத்தில் றிசாத் ஈடுபடுகின்றார், தேசிய பாதுகாப்புக்கு அவர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றார்’ என்று, அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்த தேசிய சங்க சபையின் செயலாளர் ஆனந்த சாகர தேரர், இதன்போது ஊடகங்களின் முன்னால் தோன்றி, றிசாத் பதியுத்தீனுக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தொடர்பில் ஆனந்த சாகர தேரர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களில் வெளியாகின. இதனையடுத்து, கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்தார். தேசிய சங்க சபை ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் தன்னைக் குறித்து, பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும், அதனூடாக தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார். குறிப்பாக, வில்பத்து காடுகளை – தான் அழிப்பதாகவும், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் ஆனந்த சாகர தேரர் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களை தனது முறைப்பாட்டில் அமைச்சர் றிசாத் பிரதானப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, ஆனந்த சாகர தேரர் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமென்று றிசாத் பதியுத்தீன் சவால் விடுத்தார். அல்லாது விட்டால், தேரரிடம் 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரவுள்ளதாகவும் றிசாத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், ஆனந்த சாகர தேரரை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விவாதிக்க வருமாறு அமைச்சர் றிசாத் பதியுத்தீன் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட ஆனந்த சாகர தேரர், ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் றிசாத்துடன் விவாதிப்பதற்கு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிணங்கவே, கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியிரவு, ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ நிகழ்சியில் மேற்படி இருவரும் கலந்து கொண்டு விவாதித்தனர்.

விவாதமும் விமர்சனங்களும்

அமைச்சர் றிசாத் பதியுத்தீன், மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆனந்த சாகர தேரருடன் விவாதித்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விவாதத்தில் அமைச்சர் றிசாத் ஈடுபட்டிருக்கவே கூடாது என்று, ஒரு தரப்பார் கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர், இந்த விவாதத்தில் கலந்து கொண்ட றிசாத் பதியுத்தீனை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.

வில்பத்து பகுதியில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்றும், அங்கு சட்ட விரோத நில ஆக்கிரமிப்பை அவர் மேற்கொள்கிறார் எனவும், பல்வேறு தடவை இதற்கு முன்பாகவும் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். ஆயினும், ஆனந்த சாகர தேரருடன் மட்டும்தான் அமைச்சர் றிசாத் இவ்வாறானதொரு விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘ஆனந்த சாகர தேரர் ஒரு பௌத்த துறவியாக இருந்து கொண்டு, அமைச்சர் றிசாத் மீது சுமத்தி வரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை. அமைச்சர் றிசாத் குறித்து, ஆனந்த சாகர தேரர் கூறுகின்றவற்றினை சிங்கள பௌத்த மக்களில் கணிசமானோர் நம்பி விடுவதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனந்த சாகர தேரர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் நம்பி விடுவார்களாயின், அது – அமைச்சருக்கும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் ஆபத்தாக அமைந்து விடும். அதனால்தான் ஆனந்த சாகர தேரரை, இவ்வாறானதொரு விவாதத்துக்கு அமைச்சர் அழைத்தார்’ என்கின்றனர் றிசாத் தரப்பினர்.

இன்னொருபுறம், இதற்கு மாறான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. ‘வில்பத்து விவகாரத்தினை அமைச்சர் றிசாத் – அரசியல் லாபமாக்கி வருகின்றார். தன்னைச் சுற்றி ஓர் ஊடக ஒளி வட்டத்தினை ஏற்படுத்துவதற்காகத்தான், ஆனந்த சாகர தேரரை அமைச்சர் றிசாத் இவ்வாறானதொரு விவாதத்துக்கு வருமாறு அழைத்தார். இந்த விவாதத்தால் முஸ்லிம் சமூகத்துக்கு நல்லவை எதுவும் நடந்து விடப்போவதில்லை. வேலியால் போகிற ஓணானைப் பிடித்து தனது சட்டைக்குள் விடுகிற வேலையைத்தான் இதன் மூலம் றிசாத் செய்துள்ளார்’ என்கின்றனர் வேறொரு தரப்பினர்.

எவ்வாறாயினும், இவ்வாறானதொரு நிகழ்வுக்கு ஆனந்த சாகர தேரரை அழைத்து, அவரோடு விவாதித்த அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் தைரியம் பாராட்டுக்குரியது. அதுவும் சிங்கள மொழியில் புலமையற்றவராக இருந்து கொண்டு, இப்படியொரு விவாதத்தினை றிசாத் எதிர் கொண்ட விதம் ரசனைக்குரியதாகும்.

பலங்களும் – பலவீனங்களும்

குறித்த விவாத நிகழ்ச்சி முழுக்க, ஆனந்த சாகர தேரர்; பதட்டத்துடனும் பரபரப்பாகவும் காணப்பட்டார். ஆயினும், அமைச்சர் றிசாத்திடம் இவ்வாறானதொரு உணர்வுநிலை தெரியவில்லை. ஒரு மெல்லிய புன்னகையுடன், தேவையான சமயங்களில் அந்தப் புன்னகையினை நையாண்டி கலந்ததாக மாற்றி, அந்த விவாதம் முழுக்க அமைச்சரால் பயணிக்க முடிந்தது. றிசாத் பதியுத்தீனின் விக்கட்டுகளை நோக்கி, தனது பந்துகளை ஆக்ரோசமாக வீசுவதில் மட்டுமே ஆனந்த சாகர தேரர் குறியாக இருந்தார். ஆனால், றிசாத் அடித்த பந்துகளை தடுத்து நிறுத்தும் வகையிலான களத் தடுப்புகளில், தேரர் மிகவும் பலவீனமாக இருந்தமையை அந்த விவாத நிகழ்வில் காணக்கிடைத்தது.

‘வில்பத்து காடுகள் சட்ட விரோதமாக அழிக்கப்பட்டு, அங்கு நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள். நீதிமன்றில் வழக்குத் தொடருங்கள்’ என்று, அந்த விவாதத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கூறிய இடம் கவனிப்புக்குரியதாகும்.

வில்பத்து காட்டினை றிசாத் பதியுத்தீன் அழித்துள்ளார், அங்கு நில ஆக்கிரமிப்புச் செய்துள்ளார் என்கிற குற்றச்சாட்டுக்கள் உண்மையா, பொய்யா என்பது குறித்து இந்தக் கட்டுரை பேச முற்படவில்லை. ஆனால், ஆனந்த தேரர் கூறுகின்றமைபோல் அவ்வாhறான குற்றங்கள் நிகழ்ந்திருக்குமாயின், அதற்கெதிராக நீதிமன்றம் சென்று – தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்வதுதான் சரியான நடவடிக்கையாக அமையும். அதை விடுத்து, இவ்வாறு ஹிரு தொலைக்காட்சிக் கலையகத்தில் குந்திக் கொண்டு, ஆனந்த சாகர தேரர் விவாதிப்பது புத்தி சாதுரியமான செயற்பாடாகத் தெரியவில்லை.

‘அமைச்சர் றிசாத் பதியுத்தீன் சட்ட விரோமான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார் என்றால், அவற்றினை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்கள் உள்ளன என்றால், ஆனந்த சாகர தேரர் செல்ல வேண்டிய முதலாவது இடம் – பொலிஸ் நிலையமாகும். அதை விடுத்து, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதும், தொலைக்காட்சி விவாதங்களில் பேசிக் கொண்டிருப்பதும் சரியான செயற்பாடுகளல்ல’ என்கின்ற விமர்சனங்கள் நியாயமானவையாகும். ‘அமைச்சர் றிசாத் மீதும், அவர் சார்ந்த சமூகம் மீதும், ஆனந்த சாகர தேரர் கொண்டுள்ள காழ்ப்புணர்வின் காரணமாகவே, இவற்றையெல்லாம் செய்கின்றார்’ என்று கூறப்படும் புகார்களில் தவறுகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

தோற்றவர் யார்

மேற்படி விவாத நிகழ்ச்சி நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், ஆனந்த சாகர தேரர் செய்த சிறுபிள்ளைத்தனமான செயற்பாடானது, அந்த விவாதத்தில் அவர் தோற்றுப் போய் விட்டார் என்பதை அடித்துச் சொல்லியது. குறித்த ‘சலகுன’ நிகழ்ச்சி நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த போது, தன்வசம் வைத்திருந்த குர்ஆனை ஆனந்த தேரர் கையில் எடுத்தார். தான் முன்வைத்த குற்றங்கள் எவற்றினையும் செய்யவில்லை என்றால், குர்ஆனில் சத்தியம் செய்து அதனை மறுக்குமாறு, அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடம் தேரர் கோரிக்கை விடுத்தார். தேரரின் இந்தச் செயற்பாடானது, அவரின் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டியது. அவர் தோற்றுப் போய் விட்டார் என்பதை பறைசாற்றியது.

சத்தியம் என்பது சட்டத்துக்கு அப்பாற்பட்டதொன்றாகும். வெறும் சத்தியங்களை மட்டும் சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. றிசாத் பதியுத்தீன் வில்பத்து காடுகளை அழிக்கின்றார், அங்கு நில ஆக்கிரமிப்புச் செய்கின்றார், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார் என்று குற்றம்சாட்டி, அவற்றினை நிரூபிப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகக் கூறிக்கொண்டு, குறித்த விவாத நிகழ்ச்சிக்கு ஒரு ஹீரோ மாதிரி வந்த தேரர், கடைசியில் குர்ஆனில் சத்தியம் செய்யுமாறு கோரியதன் மூலம், தன்னை ஒரு கோமாளியாகக் காட்டிக் கொண்டார்.

தனது வாதமும், தான் கொண்டு வந்திருந்த ஆவணங்களும் றிசாத் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்து விட்டதாக ஆனந்த சாகர தேரர் நம்பியிருப்பாராயின், குர்ஆனை தன் கையில் எடுத்து, அமைச்சர் றிசாத்திடம் சத்தியம் கேட்டிருக்க மாட்டார்.

ஆனந்த சாகர தேரரின் கோபம் – அமைச்சர் றிசாத் மீது மட்டுமானதல்ல என்பதை, அந்த விவாத நிகழ்ச்சி மிகத்துல்லியமாக வெளிப்படுத்தியது. தேரரின் கோபம் – முஸ்லிம்கள் மீது பரவியிருந்ததை அவர் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனந்த தேரருடன் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் விவாதிப்பதற்கு எடுத்த தீர்மானத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த விவாதத்தின் இறுதி முடிவானது, அமைச்சருக்கும் அரசியல் ரீதியாக கொழுத்த புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. கொஞ்சக் காலம், இந்த விவாதம் பற்றிய கதையினை வைத்துக் கொண்டே, அமைச்சர் றிசாத் தனது அரசியலை ‘ஓட்ட’ முடியும்.

இருந்தபோதும், அமைச்சருக்கும் ஆனந்த தேரர் போன்றவர்களுக்கும், வில்பத்து விவகாரமானது ‘பிச்சைக்காரனின் புண்ணாக’ இருந்து விடக்கூடாது என்பதே நமது பிரார்த்தனையாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (05 ஜனவரி 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்