பசிலின் இடத்துக்கு தம்மிக பெரேரா; முக்கிய அமைச்சு பதவி வழங்கவும் இணக்கம்

🕔 June 9, 2022
உட்கார்ந்திருப்பவர் தம்மிக பெரேரா

சில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதன் மூலம், அந்த வெற்றிடத்துக்கு கசினோ வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பதோடு, நிதியமைச்சர் பதவியை கோரியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சு அல்லது பிரதமர் பதவிக்கு நிகரான மற்றுமொரு பதவியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அவருக்கு வெளிநாட்டு முதலீடு தொடர்பான அமைச்சுப் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசிலின் கோரிக்கையை நிராகரித்தார் கோட்டா

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ, தேசியப்பட்டியல் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக, மக்கள் முன்னணியின் முகாமைத்துவ செயலாளரும் மில்கோவின் தலைவருமான ரேணுகா பெரேரா மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். அமரசிங்கவை நியமிக்குமாறு பசில் கோரிய போதிலும் ஜனாதிபதி அதற்கு இணங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் பி.பி. ஜயசுந்தர உள்ளிட்ட குழுவின் கைதியாக இருந்த ஜனாதிபதி இம்முறை வர்த்தகர் ஒருவரின் கைதியாக மாறியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, தம்மிக்க பெரேராவின் சகோதரர்கள் இருவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 575 மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகையை ஒரே தடவையில் செலுத்த தம்மிக்க பெரேரா இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்