பரீட்சைக்கு மாணவியை தோற்ற விடாமல் தடுத்த அதிபர்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: கல்முனை கல்வி வலயத்தில் சம்பவம்

🕔 May 23, 2022

பாறுக் ஷிஹான்

மாணவி ஒருவரை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற விடாமல், அவருக்கு பரீட்சை அனுமதி அட்டையை வழங்காது  அச்சுறுத்திய அதிபருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை(23)  ஆரம்பித்துள்ள நிலையில், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவிக்கு அனுமதி அட்டை வழங்கப்படாமையின அடுத்து, மாணவியின் தந்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, மாணவிக்கு பரீட்சை எழுதுவதற்கான பரீட்சை அனுமதி அட்டையினை, பெற்றோர் மற்றும் பிராந்திய இணைப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் அதிபர் வழங்கியதோடு மன்னிப்பும் கோரியுள்ளார்.

இருந்த போதிலும் பரீட்சை அனுமதி அட்டை உரிய நேரத்துக்கு வழங்கப்படாமையினால் இன்று இடம்பெற்ற பாடத்துக்கு மாணவி தோற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும்  நாளை (24) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பாடத்துக்கு தனது மகள் தோற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உரிய  அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மாணவியின் தந்தை தெரிவித்தார்.

“எனது பிள்ளைக்கு பரீட்சை அனுமதி அட்டை  வழங்கப்படாதது போன்று, மேலும்  ஐந்து மாணவர்களுக்கும் வரவு விடயத்தைக் காணரம் காட்டி – குறித்த அதிபர்  பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என்றும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை குறிப்பிட்டார்.

இதேவேளை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உரிய தரப்பினரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மேற்படி விடயம் தொடர்பில் அதிபருக்கெதிராக உரிய நடவடிக்கையினையும் எடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்