நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரிடம் வாக்குமூலம்: சிஐடியினர் பெற்றனர்

🕔 May 19, 2022

காலி முகத்திடலிலுள்ள கோட்டா கோ கம பகுதியிலும் அலறி மாளிகைக்கு முன்பாகவும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் (சிஐடி) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி. ரத்நாயக்க, ஷான் பிரதீப் மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய எட்டு சந்தேக நபர்கள் இன்று (19) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மொரட்டுவை மாநகர முதல்வர் சமன் லால் பெனாண்டோ மற்றும் டான் பிரியசாத் உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) கைது செய்ததுடன், இன்று அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

மேற்படி வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் – கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்