ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

🕔 May 17, 2022

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது கடந்த 09ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி முகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தொடங்கியுள்ளது.

இதன்படி, கடந்த 09ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்