ரணில்: பஸ் சாரதியில்லை; அம்பியுலன்ஸ் சாரதி

🕔 May 16, 2022

– பஷீர் சேகு தாவூத் –

ந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவும் இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், அந்நாட்டில் பாரிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

நீண்ட காலம் ஆட்சி புரிந்த, முதலாளிகளுக்கும் – பாரம்பரிய கனவான்களுக்கும் வாசியான கொள்கையைக் கொண்டிருந்த ‘கொன்சவேர்டிவ்’ கட்சி தோல்வியடைந்து – தொழிலாளர் மற்றும் வசதி குறைந்தோரை முதன்மைப் படுத்தும் கொள்கை கொண்ட ‘லேபர்’ கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதனால் உடனடியாக மக்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறையை அமுல்படுத்தப்பட்டது. இந்த மானிய முறையினால் நேருவும், பண்டாரநாயக்காவும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.

இவர்களிருவரும் பிற்காலத்தில் தத்தமது நாடுகளின் பிரதமர்களாக ஆனதும் இரு நாடுகளிலும் வருமானம் குறைந்தோருக்குப் பொருட்களை இலவசமாகக் கொடுக்கும் வழமையை ஏற்படுத்தினர். இது இன்றும் வெவ்வேறு பெயர்களில் இரு நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த ஏற்பாடு சௌகரியமாக இருப்பினும், சாமானியரின் உழைக்கும் வழியைத் தேடும் ஆர்வத்தை குன்றச் செய்திருக்கிறது என்பது பொருளியலாளர்களின் கருத்தாகும்.

இலவசக் கொடுப்பனவால் ஆடம்பர ஆர்வம் குறையவில்லை, ஆனால் அதிகரித்தது. ஏனெனில் பின்னர் புகுத்தப்பட்ட தாராளவாத பொருளாதார அமைப்பு வடிவம் – ஆடம்பர மோகத்தை வளர்த்து வருகிறது. உழைக்கும் விருப்புக் குறைவு – ஆடம்பர ஆர்வம் அதிகம் என்றால் நிலமை கவலைக்குரியது.

கோட்டபாய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியானதும் வரி வீதத்தை மிகவும் குறைத்தார். அரசியல் அநுபவமற்ற துறைசார் வல்லுனர்களின் ஆலோசனையில் எதிர்கால சந்ததியினர் உடல் நலத்தோடு வாழ வழிசெய்யும் வகையில், விவசாயத்துக்கு சேதன ரசாயனப் பயளைப் பாவனையைக் கொணர்ந்தார். காலக் கணிப்பை கவனியாமலும் விவசாயிகளுக்கு இது பற்றிய அறிவூட்டலையும் தெளிவையும் கொடுக்காமலும் கொண்டு வந்த இச்செயல்பாடு தோல்வியடைந்தது.

இவை போன்ற இன்னும் சில நடவடிக்கைகளையும் கோட்டா முன்நகர்த்தினார். இதனால் நாட்டில் பொருளாதார, அரசியல் உறவில் விரிசல், ஒத்துழையாமை போன்ற நோய்கள் ஏற்பட்டன.

நாடு எனப்படுவது நிலமல்ல அது மக்களாகும். நாட்டைக் காப்பாற்றவேண்டும் என்ற குரல் பரவலாக கேட்கிறது. இக்குரல் மண்ணைக் காப்பாற்றக் கோரும் குரலல்ல; மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற குரலேயாகும்.

1978 ஆம் வருடத்திலிருந்து ரணில் விக்கிரம சிங்கவின் மாமா ஜே.ஆர். ஜயவர்தனவினால் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. காலப்போக்கில் ஆட்சி செய்த தலைவர்களாலும் அரசாங்கங்களினாலும் நவீன புதிய திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. இது இன்றுவரை தொடர்கிறது.

1978 இல் இருந்து ரணில், மேற்சொன்ன இரண்டு பொருளாதாரக் கொள்கைகளின் காலத்திலும் தொடர்சியாக நடைமுறை அரசியல் பங்குதரரராக இருந்து வருகிறார். மட்டுமல்லாமல், இக்கொள்கைகள் தொடர்பாக ஞானமுள்ளவராகவும், அவற்றுக்கு இலங்கையில் தலைமைத்துவம் வழங்கியவராகவும் இருந்துவருகிறார்.

ஆனாலும் ஏற்பட்டுள்ள இந்த நோயைக் குணப்படுத்தும் வைத்தியர் ரணில் இல்லை. அமெரிக்காவும் இந்தியாவும் மேற்குலகுமே வைத்தியர்களாவர். இதிலும் இந்தியாவை உடனடி ஆயுர்வேத வைத்தியர் என்பதே பொருத்தமாகும்.

தற்போது மக்கள் அனைவரும் ஒரு பாரிய அம்பியுலன்ஸ் வண்டியில் கிடத்தப்பட்டுள்ளனர். ரணில் டொக்டரல்லாது விட்டாலும் மிக்க அநுபவமுள்ள சாரதியாவார். தனது திறமையால் நேரத்துக்கு அம்பியுலன்ஸை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பார் என்று நம்புவோம். சிலவேளை கை, கால்களை கழற்றியாயினும் உயிர்கள் காப்பாற்றப்படலாம். கை, கால்கள் என்பன வரியதிகரிப்பும், மானிய வெட்டுமாக இருக்க வாய்ப்புண்டு.

ஆக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்போது பஸ் சாரதியல்ல, தற்சமயம் அவர் அம்பியுலன்ஸ் சாரதியாவார். ஏறுகிறவர்கள் ஏறலாம். ஆனால் வைத்தியசாலை வந்ததும் இறங்கியே ஆக வேண்டும் என்பது – மயங்கிக் கிடக்கும் தீவிர நோயாளர்களைத் தவிர, புதிதாக ஏறுபவர்களுக்கு நன்கு தெரியும்.

சாதாரண வண்டிகளின் சாரதிகள் சிலர் அம்பியுலன்ஸின் ஹோர்ன் சத்தம் கேட்டு தமது வண்டிகளை ஓரத்தில் நிறுத்தியும், சிலர் வேகத்தை குறைத்தும் இருப்பதை அரசியல் வீதியில் காணக்கிடைக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்