பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்கள் நம்பிக்கை

🕔 May 13, 2022

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என, வெளிநாட்டு தூதுவராலயங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு எதிர்வரும் வாரங்கள் முக்கியமானவை என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

“இந்த இலக்கை நோக்கிச் செயல்படவும், இலங்கை மக்களின் தேவைகளுக்குப் பதிலளிக்கவும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்; இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் சவால்ககளை எதிர்கொண்டு, பொறுப்புக்கூறக்கூடிய வகையிலான ஒரு நிலையான அரசாங்கம் அவசரமாக தேவைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமையினால், அதைச் செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண இலங்கைக்கு கிடைத்த வாய்ப்பாக அமைந்துள்ளது என, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உறுப்பு நாடுகள் ஒரு அரசியல் செயல்முறையின் ஆரம்ப அறிகுறியை காண்பதாக, என்று இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் கூறியுள்ளார்.

“எதிர்வரும் வாரங்கள் பொருளாதார நெருக்கடியை ஆழமாக்கிய அரசியல் உறுதியற்ற தன்மைக்கு ஒரு தீர்வை வழங்கும் என்று நம்புகிறேன். அனைத்து இலங்கையர்களின் நன்மைக்காகவும் அமைதியாக இருக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் வேண்டுகிறோம், ”என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ்ப் கூறுகையில், “அனைத்து அமைதியான குரல்களுக்கும் செவிசாய்க்கும் மற்றும் இலங்கை மக்களின் மிக அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசாங்கத்தை நெதர்லாந்து நம்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்