ஒரு வாரத்துக்குள் புதிய அரசாங்கம்; ஸ்திரம் ஏற்பட்ட பின்னர் 19ஆவது திருத்தம் அமுல்: நாட்டு மக்களுக்கான உரையில் கோட்டா வாக்குறுதி

🕔 May 12, 2022

ரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்துவற்கு தான் நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (11) இரவு 09 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைக் கூறினார்.

நாடு ஸ்திரதன்மை அடைந்த பின்னர், ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாது செய்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

“எமது நாடு தற்போது வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்துக்கு வருவதற்கு முன்பாக, பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கி வந்த சிரமங்கள் காரணமாக சமூக, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது.

யோசனை

இந்த பிரச்னைக்கு தீர்வாக பல்வேறு தரப்பினரும் பொதுவான யோசனையொன்றை முன்வைத்தார்கள். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை கட்சிகளை இணைத்த புதிய அரசாங்கமொன்றை நிறுவுமாறு பலரும் யோசனைகளை முன்வைத்திருந்தார்கள்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தேன்.

அந்த கருத்துக்களை நானும் ஏற்றுக்கொண்டு, இந்த பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பின்னணியை ஏற்படுத்தி, அதற்காக மிகவும் சிரமமான கடுமையான பல தீர்மானங்களை எடுத்தேன்.

கடந்த அமைச்சரவையை நியமிக்கும் போது, அப்போது இருந்த பல மூத்த அமைச்சர்களும், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இல்லாத, புதிய அமைச்சர்களுடனான புதிய அமைச்சரவையொன்றை ஸ்தாபித்தேன்.

அதேபோன்று, பிரதமர் ராஜினாமா செய்து, முழு அமைச்சரவையையும் கலைத்து, புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்தேன். எனினும், மே மாதம் 09ம் திகதி காலை நீங்கள் அனைவரும் அறிந்த விதத்தில் மிகவும் அசாதாரண சூழ்நிலையொன்று ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னர், குறுகிய நேரத்தில் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி, முப்படைகளை கடமைகளுக்கு அமர்த்துவதற்கு முன்பாகவே, திட்டமிட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்பட்டது. சில மணிநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடங்கலாக 09 பேர் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.

அதேபோன்று, சுமார் 300 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று, பெருமளவிலான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. நாடு முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை முதன்மையாக கட்சி பேதங்கள் இன்றி நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

நியாயப்படுத்த முடியாது

அது தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். அது எவ்வாறானாலும், அதன் பின்னர் நடத்தப்பட்ட கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்களை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்த சம்பவம் நடந்தேறிய சந்தர்ப்பத்திலிருந்து, பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதி, பொலிஸ் மாஅதிபர், புலனாய்வு பிரதானி உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகளை தொடர்புப்படுத்திக் கொண்டு, நான் நாட்டை அமைதியாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

நாட்டின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாக காணப்படுகின்றது. அதனால், அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முப்படைகளுக்கும், பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்ட, திட்டமிட்ட, ஆணை வழங்கிய மற்றும் பிரசாரம் செய்த அனைத்து தரப்புக்கும் எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனால், இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடாது, அதனை தவிர்த்துக்கொள்ளுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நான் அனைத்து கட்சிகளினதும் தலைவர்களுடனும் இணைந்து செயற்பட்டு வருகின்றேன்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை முகாமைத்துவப்படுத்த, அதேபோன்று நாடு அராஜக பாதைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்வதற்கும், தற்போது நிறுத்தப்பட்டுள்ள அரச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கும், புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

நான் இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை வெற்றிகொண்ட, அதேபோன்று, நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதன்பின்னர், நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் கிடைக்கும் விதத்திலான 19வது திருத்தம் அமுல்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன்.

புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய திட்டத்தை முன்வைத்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பேன். அதேபோன்று, பல்வேறு தரப்புக்களினால் ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் புதிய அரசாங்கம், நாட்டை ஸ்திரதன்மைக்கு கொண்டு வந்ததன் பின்னர் அனைத்து தரப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பேன்.

இந்த சிரமமான சந்தர்ப்பத்தில் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாது, பொதுமக்களின் உயிர்களுக்கான பாதுகாப்பை போன்று, அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்து, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அரச பொறிமுறையொன்றை தொடர்ச்சியான நடைமுறைப்படுத்துவதற்கு எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாகவும், சிந்தித்தும் செயற்படுமாறு அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்