பொருளாதார நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து, 150 கோடி ரூபாவினை மிச்சப்படுத்த யோசனை

🕔 May 7, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

நாட்டில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச நிறுவனங்களின் செலவுகளை இடைநிறுத்துமாறும் குறைக்குமாறும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் எரிபொருள், தொடர்பாடல், நீர் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கான செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் வாடகைக்குப் பெறும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறும் நிதியமைச்சு கூறியுள்ளது.

வெளிநாட்டு கல்விச் சுற்றுலா, உள்நாட்டு நிதி மூலமான பயிற்சிகள் ஆகியவற்றினை மேற்கொள்ள வேண்டாம் எனவும், அமைச்சு மற்றும் நிறுவன மட்டங்களில் வழங்கப்படும் பல்வேறு வகையான கொடுப்பனவுகளை அமைச்சரவையின் அனுமதியின்றி வழங்குவதை இடைநிறுத்துமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நலன்புரி, மானிய அடிப்படையிலான திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றினை மேற்கொள்ளாதிருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலதிக நேரக் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறும், உத்தியோகத்தர்களுக்கு அரச கடன் பெற அனுமதி வழங்க வேண்டாம் எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்திருக்கிறது.

பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது

இந்த நிலையில், நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீட்டித்திருப்பதை ரத்துச் செய்து, உடனடியாக உள்ளுராட்சி சபைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல கோடி ரூபாய் நிதியை மீதப்படுத்த முடியும் எனவும் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் இருக்கின்றன. இதில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த 2018ஆம் ஆண்டிலும், எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டும் நடைபெற்றன.

இதற்கமைய மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள், கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுக்கு வந்தன. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் – இந்த சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.

உள்ளூராட்சி சபைகள் அனைத்திலும் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 845 பேர் மாநகர சபை உறுப்பினர்கள், 483 பேர் நகர சபை உறுப்பினர்கள், 7,362 பேர் பிரதேச சபை உறுப்பினர்களாவர்.

நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் 223 சபைகளின் அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், இந்த சபைகளின் பதவிக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு மீதமாகும்?

உள்ளூராட்சி சபைகளின் கூட்டங்கள் சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும், தேவையேற்படும்போது விசேட கூட்டங்களும் நடத்தப்படும். மாநகர சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதன் உறுப்பினர்களுக்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழக்கப்படுகிறது. மாநகர சபையின் முதல்வருக்கு 30 ஆயிரம் ரூபாவும் பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

இதே வேளை நகர சபை மற்றும் பிரதேச சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. மேலும் இவற்றின் தவிசாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும், பிரதித் தவிசாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் கிடைக்கின்றது.

எனவே, தற்போது நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ரத்துச் செய்து – அவற்றினைக் கலைத்து விட்டால், பதவி நீட்டிக்கப்பட்டுள்ள காலத்துக்காக அந்த சபைகளின் உறுப்பினர்களுக்கு, வழங்கப்படவேண்டிய கொடுப்பனவு கிட்டத்தட்ட 152 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்பது கணக்கீடுகளில் தெரிகிறது.

இதேவேளை, ஒவ்வொரு சபைக் கூட்டங்களையும் நடத்துவதற்கான வேறு செலவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் சிலர் இந்த உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கவேண்டும் என்று பதிவிடுகின்றனர்.

எனவே, தற்போது நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ரத்துச் செய்து – அவற்றினைக் கலைத்து விட்டால், பதவி நீட்டிக்கப்பட்டுள்ள காலத்துக்காக அந்த சபைகளின் உறுப்பினர்களுக்கு, வழங்கப்படவேண்டிய கொடுப்பனவு கிட்டத்தட்ட 152 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்பது கணக்கீடுகளில் தெரிகிறது.

இதேவேளை, ஒவ்வொரு சபைக் கூட்டங்களையும் நடத்துவதற்கான வேறு செலவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் சிலர் இந்த உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கவேண்டும் என்று பதிவிடுகின்றனர்.

அதிகார சமநிலை இல்லாமல் போகும்

இந்த நிலையில், அரச நிதியை மீதப்படுத்துவதற்காக உள்ளுராட்சி சபைகளைக் கலைத்தல் வேண்டும் என முன்வைக்கப்படும் கருத்து தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் உள்ளுராட்சி ஆணையாளர் எம். உதயகுமாரிடம் பிபிசி தமிழ் பேசிய போது; “நாட்டில் மாகாண சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளுராட்சி சபைகளையும் கலைத்து விட்டால், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு உள்ளுர் மட்டங்களில் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்” எனக் கூறினார்.

“உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தல் வரை ஒவ்வொரு உள்ளுராட்சி சபையின் நிர்வாகத்தினையும் ஒவ்வொரு ஆணையாளரிடம் (Commissioner) கையளிப்பதற்கு சட்டத்தில் இடமுள்ளது. ஆனால், தற்போது மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் – உள்ளுராட்சி சபைகளும் கலைக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதிகளின் பங்கு பற்றுதல்கள் இச்சபைகளில் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்”.

“அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக அதிகாரங்களைப் பரவலாக்குவதற்காகவே மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி முறைமைகள் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் உள்ளுராட்சி சபைகளைக் கலைத்து விட்டு, அதன் பொறுப்புகள் ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் போது, பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும்”.

“அதேவேளை உள்ளுராட்சி சபைகளைக் கலைத்து விட்டாலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை, அச்சபைகளின் பொறுப்புகளை ஆணையாளர்களிடம் தொடர்ச்சியாக வழங்க முடியாது. இடையில் தேர்தலொன்றை நடத்த வேண்டிவரும். அப்படியொன்றால் தேர்தலொன்றை நடத்துவதற்கும் பாரிய செலவு ஏற்படும்” என்றும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டு தனிநபர் ஒருவரிடம் அச்சபைகள் பொறுப்பளிக்கப்படும் போது, அவற்றின் நிருவாகங்கள் பிழையாகக் கையாளப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் உதயகுமார் சுட்டிக்காட்டினார்.

“நாடாளுமன்றமும் இன்று குழம்பிப் போயுள்ள நிலையில், மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் உள்ளுராட்சி சபைகளையும் கலைப்பது நல்லதல்ல. அடிமட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு இல்லாமல் போய்விடும்”.

“உள்ளூராட்சி சபைகள் இயங்கும் போது, அங்கு அச்சபைகளினுடைய உறுப்பினர்களின் கண்காணிப்பு இருக்கும். அந்த சபைகள் கலைக்கப்படாத வரை, தனிநபர் ஒருவர் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் அங்கு அதிகார சமநிலை இருக்கும்.

ஆனால், சபைகள் கலைக்கப்பட்டால் – ஆணையாளர் எனும் தனிநபரின் தீர்மானத்தின் கீழ்தான் சபைகள் இயங்கும். அப்போது ஊழல் – மோசடிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று எப்படிக் கூற முடியும்” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

களத்தில் நின்று பணியாற்றும் நிலை இருக்காது

“உள்ளுராட்சி சபைகள் செயற்பாட்டில் இருந்தால், அடுத்த தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்பதற்காகவாவது, களத்தில் நின்று மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டால், அந்த நிலை இருக்காது. சபைகளில் பொறுப்பேற்கும் ஆணையாளர்கள் அவ்வாறு செயற்படுவார்கள் எனக் கூற முடியாது” என்கிறார் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. தாஹிர்.

“உள்ளூராட்சி சபைகளில் அதிகமானவை தற்போதுள்ள அரசாங்கக் கட்சியின் அதிகாரத்தின் கீழ் உள்ளன. எனவே, அடுத்த தேர்தல் வரும் போது, உள்ளுர் மட்டத்தில் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், உள்ளூராட்சி சபைகளைக் கலைப்பதற்கு அரசாங்கம் விரும்பவே மாட்டாது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் மாகாண சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி சபைகளையும் கலைத்து விட்டால், திண்மக் கழிவககற்றல் போன்ற மக்களின் மிகவும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் கூட – சிக்கல் நிலை தோன்றும் எனவும் அவர் கூறினார்.

மக்களுக்கு லாபமாக அமையும்

இவை இவ்வாறிருக்க, நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் – பதவிக் காலம் நீடிப்புச் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கலைப்பது பயனுள்ள நடவடிக்கையாக அமையும் என்றும், இன்று இரவே அந்தச் சபைகள் கலைக்கப்பட்டாலும் நல்லது எனவும், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

“கால நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதால் எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை. அந்த சபைகளைக் கலைத்து செலவுகளை மீதப்படுத்துவதென்பது மக்களுக்கு நல்லது” என்றும் தவிசாளர் அமானுல்லா கூறினார்.

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு, உள்ளூராட்சி சபைகளைக் கலைப்பதென்றால் அதனைத் தான் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்