கடுவலை நீதவான் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்தவர் பணி நீக்கம்

🕔 May 8, 2022

டுவலை நீதவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்துக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், அவரது பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குறித்த பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீதிபதிகளின் பாதுகாப்பு விடயங்களில் உரிய நேரத்தில் மற்றும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள 06 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடுவலை நீதவான் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதவான்கள், நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பணிப்புரை விடுத்தார்.

கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதித்துறை சேவை சங்கம் மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு இலங்கை நீதிச் சேவை சங்கம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

நேற்றுமுன்தினம் காலை முதல் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அந்த சங்கம் இதனை சுட்டிக்காட்டியிருந்தது.

நீதிபதிகளுக்கான பாதுகாப்பை வழங்குமாறு அனைத்துப் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை மீறி, தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாக இலங்கை நீதிச்சேவை சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 05 மற்றும் 06ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை மே 04 ஆம் திகதி கடுவலை நீதவான் நிராகரித்திருந்தார்.

அத்துடன், அன்றைய தினம், நாடாளுமன்றத்துக்கு அருகில் கைது செய்யப்பட்ட 13 பேரை சொந்த பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்