அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பாடநெறிகளை ஆரம்பிக்க பீடாதிபதி குறுக்கு வழியில் செயற்பட்டாரா: உண்மையை அறிந்து கொள்ள RTI மூலம் ஊடகவியலாளர் முயற்சி

🕔 April 29, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில், புதிய பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை அந்தக் கல்லூரியின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளாமல், கல்லூரியின் பீடாதிபதி மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான விடயங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI), கல்லூரியின் பீடாதிபதிக்கு ஊடகவியலாளர் ஒருவர் – விண்ணப்பம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்து நாகரீகம் மற்றும் கர்நாடக சங்கீதம் ஆகிய பாடநெறிகளை அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் ஆரம்பிப்பதற்கு கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்தி, முகாமைத்துவ சபையின் அனுமதியைப் பெறாமல் – குறுக்கு வழியில் முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்து நாகரீகம் – வவுனியா கல்விக் கல்லூரியிலும், கர்நாடக சங்கீதம் – ஸ்ரீபாத மற்றும் யாழ்ப்பாணம் கல்விக் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கல்வியமைச்சு வெளியிட்டுள்ள உத்தேச பாடநெறிகள் தொடர்பான பட்டியலில், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இந்து நாகரீகம் மற்றும் கர்நாடக சங்கீதம் ஆகிய பாடநெறிகள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பான முழு விவரங்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதிக்கு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்