மருதமுனையில் கடை உடைத்து திருடியவர்களுக்கு விளக்க மறியல்

🕔 April 14, 2022

பாறுக் ஷிஹான்

மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் உதிரிப்பாகங்களை திருடிய  03 சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை அதிகாலை, மருதமுனை பிரதான வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தை உடைத்து திருடப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன் பிரகாரம்  குறித்த கடையில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய உதிரிப்பாகங்களை திருடி வந்த சந்தேக நபர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டதுடன், அதில் மூவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்து கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குறித்த மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் 13 வருட காலமாக வேலை செய்து வந்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவர் –  தனது நண்பர்களுடன் இணைந்தே கடையை உடைத்து, உதிரிப்பாகங்களை உர மூடைகளில் கட்டிக்கொண்டு செல்ல தயாரான நிலையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்கள் பெரியநீலாவணை மயானத்துக்கு அருகில் மறைந்திருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்