இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன?

🕔 April 7, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதிக்கு இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும் மாறியிருக்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, அந்தத் தேர்தலில் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போது, பலரும் அதனை வியப்புடன் நோக்கினார்கள். ராஜபக்ஷவின் ஆட்சியை மேலும் சில தசாப்தங்களுக்கு அசைக்க முடியாது என, எதிர்த் தரப்பினர்கள் கூட பேசிக் கொண்டிருந்த சூழலில்தான், அவருக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் கூட கடந்திராத நிலையில், அவரை நாட்டு மக்கள் வீட்டுக்குச் செல்லுமாறு கூறும் நிலை எப்படி ஏற்பட்டது? கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்வி எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து ஆராய்வது முக்கியமானதாகும்.

இவ்விடயங்கள் குறித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தவறுகள்

“கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியல் அனுபவங்கள் கிடையாது என்பது பெரும் பலவீனமாகும். அரசியல் நிர்வாகத்தை மேற்கொள்வதற்கும், பொதுத்துறை நிர்வாகத்தை நடத்திச் செல்வதற்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன” என்கிறார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவதற்கு முன்னர், சர்வதேசத்தில் அவர் பற்றிய குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் இருந்தன. அதனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனதன் பின்னர், உலக நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைக்கவில்லை. வெளிநாடுகளின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இலங்கையுடன் சாதகமான வெளியுறவு இல்லாமல் போயிற்று. இலங்கைக்கு டொலர் கிடைக்காமல் போனமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றிய மோசமான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் சர்வதேசங்களில் இருக்கின்றமையினால், இலங்கைக்கு கிடைக்கும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் போயின” என்கிறார் பேராசிரியர் பௌசர்.

அரசியல் என்பது யதார்த்தமானதொரு விடயமாகும். சூழலுக்கேற்ற வகையில்தான் அரசியலைச் செய்ய முடியும் என்று சொல்லும் அவர் தொடர்ந்து கூறுகையில்; ”நாட்டின் போக்கு, மக்களின் விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இணங்கவே, நாட்டின் தலைவர் செயற்பட வேண்டும். அவற்கு மாறாக செயற்படும் போது, இவ்வாறான பேராட்டங்கள் வெடிக்கும் நிலை ஏற்படுகின்றன”.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், தனது கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தனக்குப் பிடித்தமானவர்களை அவர் முன்னிலைப்படுத்தினார். அரசாங்கத்துக்குள் இருக்கும் மூத்த அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவதற்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அப்படியென்றால், அவர்களின் ஆலோசனைகளை ஜனாதிபதி பெற்றுக் கொண்டாரா என்கிற கேள்விகள் இங்கு உள்ளன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கூட அரசியல் ரீதியான பல முரண்பாடுகள் இருந்தமைக்கான பல சமிக்ஞைகள் தெரிந்தன.

சிவில் நிர்வாக பதவிகளுக்கு ராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி நியமித்தார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சிவில் நிருவாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, ராணுவ அதிகாரிகளிடம் ஜனாதிபதி ஒப்படைத்தார். இதுகூட, தற்போதைய நிலைமைக்குக் காரணமாக உள்ளது.

நெருக்கடி மிக்க நிலையில் நாடு இருந்தபோது, இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய தீர்மானங்களை அவர் எடுத்தார்.” என்று பேராசிரியர் பௌசர் கூறுகிறார்.

பேராசிரியர் பௌசர்

தொடர்ந்து பௌசர் தெரிவிக்கையில்; ”இதற்கு உதாரணமாக, ரசாயனப் பசளை இறக்குமதியை நிறுத்தி விட்டு, இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அறிவித்தலைக் கூறலாம்.

நாட்டை விட்டு டொலர் செல்வதைத் தடுக்கும் முகமாகவே அந்த முடிவை அவர் எடுத்தார். ஆனால், அது – நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்நியச் செலாவணி வெளிச் செல்வதைத் தடுப்பதற்காக, சில தவறான தீர்மானங்களை அவர் எடுத்தார்.

கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் கூட, நாட்டுக்கு மிகவும் பாதகமான நிலைமையை ஏற்படுத்தியது. இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ச்சியாக உதவி வந்துள்ளன. ஆனால், முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமை காரணமாக அந்த நாடுகளின் ஆதரவுகளும், உதவிகளும் இலங்கைக்கு போதியளவு கிடைக்காமல் போயின.

தேசிய சூழல், பிராந்திய சூழல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அவற்றினைக் கருத்திற் கொள்ளவில்லை” என்நார்.

சீனாவுடன் தொடர்ச்சியாக நெருக்கமான உறவை வைத்துக் கொண்டு, அந்த நாட்டிடம் பெற்று வந்த கடன்கள், இலங்கையை இறுக்கமானதொரு நிலைக்குள் தள்ளி விட்டிருகிறது. அந்தக் கடன்கள் இல்லையென்றால் ஓரளவு நிலைமைகளைச் சமாளித்திருக்கலாம்.

இவ்வளவு காலமும் கடனை அடைப்பதற்கான வருவாயினை சுற்றுலாத்துறை பெற்றுத் தந்நது. ஆனால், சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருவாய் தற்போது இல்லாமல் போனதால், இவ்வாறான பொருளாதார நெருக்கடி நிலைமை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

குடும்ப ஆட்சி மீதான வெறுப்பு

நாட்டிலுள்ள குடும்ப ஆட்சி மீது மக்களுக்கு பெரும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு குடும்ப ஆட்சி சரிவராது என்பதை மக்கள் புரிந்து விட்டார்கள். தனது குடும்பத்தாரை அரசாங்கத்துக்குள் பெருமெடுப்பில் உள்வாங்கியமை ஜனாதிபதி செய்த பெரும் தவறுகளில் ஒன்றாகும்.

தன்னை செயல் வீரராகக் காட்டிக்கொண்ட ஜனாதிபதி, தனது குடும்பத்தவர்களுக்கு அதிகளவில் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்திருக்கக் கூடாது. தமது கட்சிக்குள்ளிருக்கும் மூத்த தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காமல், தனது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி அள்ளி வழங்கினார். அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை.

இந்த நாட்டில் வாரிசு அரசியல் இருந்து வருகிறது. டி.எஸ். சேனநாயக்கவுக்குப் பின்னர் அவரின் மகன் டட்லி சேனநாயக்க பிரதமரானார். என்றாலும் கூட, ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் ஆதிக்கம் போல் எப்போதும் இருந்ததில்லை.

அரசாங்கத்தில் இந்தக் குடும்ப ஆதிக்கம் நிலவுவதால், இவர்களின் தீர்மானமே – நாட்டின் தீர்மானமாக இருந்து வந்துள்ளது. அரசாங்கமொன்றினுள் அங்கம் வகிக்கும் பலருக்கும் முக்கியத்துவமளிக்கும் போது, ஒரு விடயத்தில் பலரின் கருத்துக்களும் அபிப்பிராயங்களும் வெளிப்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். அது நல்லதொரு தீர்மானம் எடுப்பதற்கு உதவியாகவும் அமையும். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதனைச் செய்யவில்லை.

இதேபோன்று, ஜனாதிபதி தனக்கான ஆலோசகர்களாக அரசியல் அனுபவம் மிக்கவர்களை விடவும், ராணுவம் உள்ளிட்ட வேறு துறை சார்ந்தவர்களையே வைத்துக் கொண்டுள்ளார். இதுவும் அவரின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது” என்கிறார் பல்கலைக்கழக அரசியல் துறைத்தலைவர் பௌசர்.

இனவாதமும் முஸ்லிம் விரோதப் போக்கும்

ஜனாதிபதியின் தோல்விக்கு காரணமாக அமைந்த இன்னுமொரு விடயம் அவர்கள் கையில் எடுத்த இனவாதக் கொள்கையாகும். முன்னைய அரசாங்கங்களில் முஸ்லிம்கள் பலர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அதனை அப்போதைய அரசாங்கங்கள் ஒரு யுக்தியாகவே செய்திருக்கின்றன. மத்திய கிழக்கு உதவிகளைப் பெறுவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர்.

இலங்கைக்கான எரிபொருளை வழங்குவதிலும், இலங்கையின் தேயிலையை பெற்றுக் கொள்வதிலும் மத்திய கிழக்கு நாடுகள் முன்னணியிலுள்ளவை. இந்த விடயத்திலும் தற்போதைய அரசாங்கம் தவறிழைத்துள்ளது.

அதேநேரம், இந்த ஆட்சியில் நடைபெற்ற முஸ்லிம் விரோத செயற்பாடுகளும் இலங்கைக்கு பாதகமான நிலைமையினையே தோற்றுவித்தது. முஸ்லிம்களுக்கு விரோதமாகப் பேசியவர்களையே, மத்திய கிழக்கு நாடுகளிடம் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த அரசாங்கம் அனுப்பியிருந்தமையினையும் காண முடிந்தது.

ஆட்சிக்கு வருவதற்காக சிலர் இனவாதத்தை பயன்படுத்தியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் அதனைக் கைவிட்டமையைக் கண்டிருக்கின்றோம். ஆனால், இந்த ஆட்சியாளர்கள் இனவாதத்தைத் தொடர்ந்தும் கையில் வைத்துக் கொண்டேயிருந்தனர். ஜனாதிபதியின் உரைகளில்; சிங்கள மக்களினாலேயே அவர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதாக அடிக்கடி அவர் குறிப்பிட்டு வந்தமையை இங்கு சுட்டிக்காட்ட முடியும். இந்த நிலைமையானது தற்போதைய ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்பான அவநம்பிக்கைகளை மற்றைய நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு நாடும் தனித்துச் செயற்பட முடியாது. ஏனைய நாடுகளின் தயவு கட்டாயம் தேவை. இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி தன்னையும் தனது நாட்டையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளைத்தான் அதிகளவில் மேற்கொண்டிருக்கின்றார். இந்தச் செயற்பாடுகள் கூட, தற்போது நமது நாட்டை நெருக்கடியான நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு கருத்தியல்வாதியாக இருந்துள்ளார். ஆனால், யதாரத்தவாதியாக இருக்கத் தவறி விட்டார்.

ஜனாதிபதி பதவி துறந்தால் பதிலீடு?

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை உடனடியாக மீட்பதென்பது கடினமானதாகும். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்றாலும் அதனை உடனடியாக செய்ய முடியாது.

இருந்தபோதும் மேற்குலகின் ஆதரவைப் பெற்ற ஒருவர் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, நாட்டுக்கு நிறைய உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சீனா – உதவிகளையும் கடன்களையும் வழங்கும் போது எப்போதும் பெரியளவிலான பலன்களை எதிர்பார்க்கும். இந்தியாவும் அவ்வாறுதான். இலங்கையிடமிருந்து சீனா விலகிப் போனால், இலங்கைக்கு இந்தியா உதவுமா என்பதும் கேள்விக்குரியதாகும்.

ஆனால் ஒப்பீட்டு ரீதியில் மேற்கு நாடுகள் அவ்வாறில்லை. வறுமை ஒழிப்பு, சுகாதார மேம்பாடு போன்ற வேலைத் திட்டங்களுக்காக மேற்கு நாடுகள் நிறையவே உதவி செய்யும். இலங்கையில் யுத்த நிறுத்தம் நிலவிய 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இவ்வாறான நிதியுதவிகள் நிறையக் கிடைத்தன. அதனால்தான் மேற்கு நாடுகளின் ஆதவை இலங்கை பெற வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது இதைத்தான் செய்தார். சந்திரிக்காவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – மரபு ரீதியாக சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன்தான் நெருக்கமான ராஜதந்திர உறவை வைத்துக் கொள்ளும். அல்லது அணிசேரா கொள்கையினைப் பின்பற்றும்.

ஆனால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக வந்தபோது, லக்ஷ்மன் கதிர்காமரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து தனது கட்சி சார்ந்த சில கொள்கைகளை உடைத்தார். ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தினார். விடுதலைப் புலிகளை அந்த நாடுகளில் தடைசெய்வதற்கு சந்திரிக்காவின் அந்தக் கொள்கை நிறையவே உதவின. நிறைய நிதியுதவிகளும் அங்கிருந்து கிடைத்தன.

மேற்கு மற்றும் அமெரிக்க நாடுகளுடனான நெருங்கிய உறவைக்கொண்ட அவ்வாறானதொரு வெளிநாட்டுக் கொள்கையினை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தத் தவறியமை கூட, இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைவரத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

எனவே மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்ற ஒருவரை தற்போதைய நிலையில், நாட்டின் தலைவராக்குவது பொருத்தமான தீர்மானமாகவே அமையும்.

மஹிந்தவை மக்கள் ஏற்க மாட்டார்கள்

அப்படியென்றால் இப்போதுள்ள அரசியல் தலைவர்களில் யார் இதற்குப் பொருத்தமானவர் என்கிற கேள்வியும் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை எடுத்துக் கொண்டால் இந்த விடயத்தில் அவர் தோல்வியடைந்து விட்டார். அவர் ஜனாதிபதியாவதையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எடுத்துக் கொண்டால் வெளிநாடுகளுடனான உறவைப் பேணுவதில் அவர் விற்பன்னரா என்கிற கேள்விகள் உள்ளன. ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது நாடாளுமன்றத்தில் பலம் இல்லை என்றாலும் கூட, மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவுடானான வெளியுறவில் அவருக்கு சிறப்பான அனுபவம் உள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை மேற்கு நாடுகளுடன் பின்னிப் பிணைந்ததாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் தலைவரும் பிரதமருமான டி.எஸ். சேனநாயக்க தொடக்கம் ரணில் விக்ரமசிங்க வரை, அவர்கள் மேற்கு நாடுகளை பகைத்ததில்லை. ‘எங்கள் பாதுகாப்பு அரண் – பிரித்தானியாவும், அமெரிக்காவும்தான்’ என, டி.எஸ். சேனநாயக்க பல தடவை சொல்லியிருக்கின்றார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவை ஊடாக உதவிகளைப் பெறுவது என்றாலும் கூட, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதவு தேவை. அதேபோன்று மத்திய கிழக்கு நாடுகளுடன் மேற்கு நாடுகளுக்கு நல்ல உறவுகள் உள்ளன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில், இவர்தான் இப்போதைய நிலையில் ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கூறுவதை விடவும், இவ்வாறான ஒருவர் ஆட்சிக்கு வருவது சிறப்பானது எனக் குறிப்பிடலாம்.

அதேவேளை இந்தியாவையும் நாம் பகைத்துக் கொள்ள முடியாது. இந்தியா கூட, மேற்கு நாடுகளுக்கு சார்பான வெளியுறவுக் கொள்கையினைக் கொண்டதாகும்.

மாற்றம் நம்பிக்கையை உருவாக்கும்

தற்போது நாட்டிலுள்ள பெரும் பிரச்னை டொலர் பற்றாக்குறையாகும். முதலில் அதனைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நாட்டின் ஆட்சியாளர் மாற்றப்படுவதன் ஊடாக வெளிநாடுகளிடையே ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியும்.

தற்போது இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாகச் செல்ல வேண்டாம் என, தமது நாட்டுப் பிரஜைகளுக்கு வெளிநாடுகள் பயண அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.

எனவே, ஆட்சி மாற்றத்தினால், இலங்கை மீது வெளிநாடுகளுக்கு ஏற்படும் நம்பிக்கையின் காரணமாக, இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேபோன்று, வெளிநாட்டு முதலீடுகளும் இலங்கைக்கு மீளவும் கிடைக்கும்.

இலங்கையில் தேர்தல் ஒன்றினூடாக ஏற்படுத்தப்படும் ஆட்சி மாற்றமே நிலையானதாக இருக்கும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்தலாமா என்கிற பிரச்சினையும் உள்ளது. ஏற்கனவே நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளபோது, தேர்தலை நடத்துவதும் செலவு மிக்கதொன்றாகப் போய்விடும்.

இருந்தாலும் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்படும் தலைவர் ஒருவரால்தான் தற்போதைய நெருக்கடியில் நாட்டைக் கொண்டு செல்வதற்கான அதிக சாத்தியம் உள்ளது. இல்லாது விட்டால் மக்களின் தற்போதைய போராட்டமும், எதிப்பு மனநிலையும் தொடரவே செய்யும். தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசார நடவடிக்கைகளில் மக்களின் கவனம் திரும்பி, அவர்கள் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யும் போது, புதிய நம்பிக்கையொன்று எல்லோர் மத்தியிலும் உருவாகும்.

தற்போது சர்வ கட்சி மாநாட்டை ஜனாதிபதி கூட்டுவது, அமைச்சர்கள் ராஜிநாமா செய்வது, தேசிய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவது எல்லாமே, அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை அடுத்தவர் தலைகளிலும் சுமத்தி விடுவதற்கான முயற்சிகளாகும். இதுவும் ஒருவகை அரசியல் தந்திர உபாயம்தான்.

இடைக்கால தலைவர் ஒருவரை தெரிவு செய்வது உசிதமாகாது. மஹிந்த ராஜபக்ஷ எனும் மூத்த அரசியல் தலைவரால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையிலான சில விடயங்களை மேற்கொள்ள முடியும். ஆனால், அவரை அங்கீகரிக்க மக்கள் தயாராக இல்லை.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்