ஹிஜாப் இஸ்லாமியரின் பண்பாட்டு அடையாளம்: கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக இலங்கையில் இருந்து எழும் குரல்கள்

🕔 March 15, 2022
ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

மேற்குலகு சர்வதேச ரீதியில் கட்டவிழ்த்து விட்ட இஸ்லாமியப் பீதியும் இஸ்லாமிய வெறுப்பும் – ஹிஜாபையும் இலக்காகக் கொண்டுள்ளன என்று, இலங்கையின் ஓய்வுநிலை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தெரிவித்தார்.

பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளின் வகுப்படையினுள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக மாநில கல்வித்துறை தடைவிதித்தமை செல்லுபடியாகும் என, கர்நாடக மேல்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொடர்பில் பேராசியர் நுஃமானிடம் – பிபிசி தமிழ் கருத்துக் கேட்டபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“ஈரானிய இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் சர்வதேச ரீதியில் எழுச்சியடைந்த இஸ்லாமிய புத்துயிர்ப்பு காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் மீட்டுருவாக்கம் பெற்ற பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றுதான் ஹிஜாப். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இது படிப்படியாக சர்வதேச மயப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும் வாழும் மிகப் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் வெவ்வேறு வகையில் ஹிஜாப் அணிகின்றனர். அதைத் தங்கள் பண்பாட்டு அடையாளமாகவும் கருதுகின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.

“அதேவேளை மேற்குலகு சர்வதேச ரீதியில் கட்டவிழ்த்து விட்ட இஸ்லாமியப் பீதியும் இஸ்லாமிய வெறுப்பும் – ஹிஜாபையும் இலக்காகக் கொண்டுள்ளன. சில மேலை நாடுகள் ஹிஜாபை தடைசெய்ய முயன்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் இது நடக்கிறது. இதன் விளைவுகள் துரதிஷ்டவசமானவை. தீவிர இன, மதப் பிளவுகளுக்கே இது வழிவகுக்கும்”.

“ஹிஜாப் அணிவது மத அடிப்படையில் கட்டாயமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை முஸ்லிம்களுக்கே தவிர வேறு யாருக்கும் இல்லை. முஸ்லிம்கள் மத்தியில் இதுபற்றி கருத்து வேறுபாடு உண்டு. அதை அவர்களே பேசிக் தீர்க்க வேண்டும்”.

“எந்தப் பண்பாட்டுச் சீர்திருத்தமும் உள்ளிருந்தே வரவேண்டும். வெளியாரால் நிர்ப்பந்திக்க முடியாது. பண்பாட்டுப் பன்மைத்துவம் மதிக்கப்பட வேண்டும். பண்பாட்டுச் சகிப்புத்தன்மை ஊக்கப்படுத்தப் படவேண்டும். சமத்துவமும் சமூக நீதியும் பேணப்படவேண்டும். அத்தகைய சமூகத்திலேயே சகவாழ்வு நீடித்திருக்க முடியும்” எனவும் பேராசிரியர் நுஃமான் தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்கள் சவாலுக்குட்படுத்த வேண்டும்

இலங்கையின் தேசிய ஷுறா கவுன்சிலினுடைய முன்னாள் பொதுச் செயலாளர் மஷிஹுதீன் இனாமுல்லா (நளீமி) இது தொடர்பாக பேசுகையில்; கர்நாடக நீதிமன்றின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இந்திய முஸ்லிம்கள் இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.”இந்தியா மதச் சார்பற்ற ஒரு நாடு. அது பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின் தனித்துவங்களையும் கலாசாரங்களையும் அங்கீகரிக்க வேண்டும்.

மஷிஹுதீன் இனாமுல்லா

நிகாப் (முகத்தை மறைத்தல்) ஆடை அணிவதில் சில பிரச்சினைகள் இருந்தாலும் கூட, ஹிஜாப் (முகம், முன்கை தவிர, உடலை மறைத்து) அணிவதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஹிஜாப் என்பது, அடிப்படையான இஸ்லாமிய ஆடையாகும்.

பாடசாலை உள்ளிட்ட எந்தவொரு இடத்திலும் சமய கலாசார தனித்துவங்களைப் பேணுவது பிரச்சினையானதொன்றல்ல. சீக்கியர்களுக்கு தலையை மறைக்க முடியுமென்றால், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளுக்கு தலைமை மறைக்க முடியுமென்றால் ஏன் ஹிஜாப் அனுமதிக்கப்பட முடியாது” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

‘முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை’ என, கர்நாடக மேல்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளமையினை சுட்டிக்காட்டிப் பேசிய மஷிஹுதீன்; “அப்படிக் கூறும் அதிகாரத்தை அந்த நீதிமன்றத்துக்கு யார் கொடுத்தது” எனக் கேட்டார்.

“அகில இந்திய ஜம்இய்யத்துல் உலமா, மாநிலங்களிலுள்ள ஜம்இய்யத்துல் உலமா, லக்னோ நத்வத்துல் உலமா (Lucknow Nadwatul Ulama) மற்றும் இந்திய உலமா கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளிடம் இது குறித்து கேட்டு விட்டுத்தான், நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர்; “இந்தத் தீர்ப்பை இந்திய முஸ்லிம்கள் சவாலுக்குட்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

ஆடைக்கு மானசீக கலாசார பெறுமானம் உள்ளது: பேராசிரியர் மஸாஹிர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவிக்கையில்; “ஆடை என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்பதற்கு அப்பால், அதற்கு மானசீகமான கலாசார பெறுமானமொன்றும் உள்ளது.

பேராசிரியர் மஸாஹிர்

எனவே, அதில் கை வைப்பதாகவே கர்நாடக மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நான் பார்க்கிறேன். இந்தத் தீர்ப்பு கண்டனத்துக்குரியதாகும்”. என்றார்.

“ஹிஜாப் என்பதற்கு ‘மறைப்பு’ என்று அர்த்மாகும். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இணங்க ‘மறைப்பு’ என்பது பெண்களுக்கு உள்ளது போன்று ஆண்களுக்கும் இருக்கின்றது. உடலமைப்புக்கு ஏற்ப ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது வேறுபடுகிறது”.

“இருந்தபோதும் ‘மறைப்பு’ என்பது எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என ‘ஷரீஆ’வில் (இஸ்லாமிய சட்டம்) குறிப்பிடப்படவில்லை. ஆனால் நிபந்தனைகள் உள்ளன. பெண்களின் ஹிஜாபைப் பொறுத்தவரை அவர்களின் முகம் மற்றும் முன்னங் கைகள் தவிர்ந்த அனைத்து அங்கங்களும் மறைக்கப்பட வேண்டும். அவ்வாறு மறைப்பது வெளித்தெரியக் கூடாது. மறைக்கப்படும் ஆடை – உடலுடன் ஒட்டியிருக்கக் கூடாது. வேறு சமயங்களின் வடிவங்களுடன் ஒத்ததாக இருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் ஹிஜாப் தொடர்பில் உள்ளன”.

“எங்கள் உம்மம்மா (தாயின் தாய்) அவர்களின் காலத்தில் நீண்ட கையுள்ள சட்டை, பாவாடை அணிந்து – அவற்றின் மேல் புடவை அணிந்து கொள்வார்கள். அந்தப் புடவையினாலே தலையை மறைத்து முக்காடு போட்டுக் கொள்வார்கள். இதுவும் இஸ்லாமிய ஹிஜாப் முறைதான். அந்த வகையில் ஹிஜாபுக்கு வடிவம் இல்லை என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன்”.

“அடுத்த விடயம் ஹிஜாபுக்கு நிறமும் இல்லை. கறுப்பு நிறத்தில் அநேகமானோர் ஹிஜாப் அணிந்து கொள்வதைக் காண்கிறோம். அது சஊதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியான கலாசாரமாகும். ‘ஷரீஆ’வில் (இஸ்லாமிய சட்டம்) ஹிஜாபுக்கான நிறம் கட்டாயப்படுத்தப்படவில்லை. மலேசிய முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் ஆடையானது இலங்கை, இந்திய முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவை” என்றும் பேராசிரியர் மாஸாஹிர் கூறினார்.

சீருடை நிறத் துணியால் தலையை மறைப்பதில் தவறொன்றுமில்லை

இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிப்பாளரும், ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்’ அமைப்பின் தலைவியுமான புர்கான் பி இப்திகார் பிபிசி உடன் பேசியபோது;

“பாடசாலை சீருடை நிறத் துணியினால் மாணவிகள் தலையை மறைத்து ‘ஸ்கார்ஃப்’ அணிவதில் தவறொன்றுமில்லை. ஹிஜாப் என்றால் கறுப்பு நிறத்தில் ஹபாயாதான் அணிய வேண்டுமென்றில்லை. எங்கள் தாய்மாரின் காலத்தில் எல்லோரும் புடவைதான் அணிந்தார்கள். நானும் புடவைதான் அணிகிறேன். இலங்கையிலிருந்து சஊதி அரேபியாவுக்கு பணிப் பெண்கள் சென்று வரத் தொடங்கியதில் இருந்துதான், ஹிஜாபாக கறுப்பு ஹபாயா அணிகின்ற நடைமுறை இருந்து வருகிறது. அது அந்த நாட்டுக் கலாசாரம்” என்றார்.

புர்கான் பி இஃப்திகார்

“இலங்கையில் கூட சில பாடசாலைகளில், பெண் பிள்ளைகள் தலையை மறைத்து சீருடை அணிவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகின்றமையை நாம் காண்கிறோம். ஆனால், அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது. அந்த உரிமையை அவர்களிடம் விட்டு விட வேண்டும்”. “புடவை, ஷல்வார், ஹபாயா என்று பல்வேறு வகையிலும் பெண்கள் ஹிஜாப் முறையில் ஆடைகளை அணிந்து கொள்ள முடியும் எனவும் சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பி இப்திகார் சுட்டிக்காட்டினார்.

ஹிஜாப் என்பது இஸ்லாமிய ஆடை முறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபுமொழித் துறை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.சி.எஸ். சாதிஃபா இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; “ஹிஜாப் என்பது இஸ்லாமிய ஆடை முறையாகும். பெண்களின் ஹிஜாப் குறித்து 8 நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகள் அனைத்தும் பேணப்பட்டால்தான் அதனை ஹிஜாப் என்போம்”.

“ஹிஜாப்பை அணியக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. வயது வந்த பெண் பிள்ளையொருவர் பாடசாலைக்கும் ஹிஜாப் அணியாமல் போக முடியாது. ஹிஜாப் என்பது கட்டாயமானதாகும்” என்றார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்