அட்டாளைச்சேனை அல் முனீறா பாடசாலை அதிபர் ஒழுக்கமற்று செயற்படுகிறார்; அபிவிருத்திச் சங்கம் குற்றச்சாட்டு: வலயக் கல்விப் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிப்பு

🕔 March 14, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலை அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ள நிலையில், குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவரை இடமாற்றம் செய்யுமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்தும் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

‘பாடசாலை அதிபருக்கு எதிரான முறைப்பாடு’ எனும் தலைப்பில் 05.01.2022 திகதியிடப்பட்டு, வலயக் கல்வி பணிப்பாளருக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் அதிபருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகளை, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் சில – மிகவும் பாரதூரமானவையாகும்.

அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் பாடசாலையில், சம்பந்தப்பட்ட அதிபர் கடந்த 02 வருட காலமாகப் பணியாற்றி வருவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கமற்ற நடத்தை, சக ஆசிரியர்களுடன் நாகரீகமற்ற முறையில் பேசுவது, நிதியை தவறாகக் கையாண்டமை, நிர்வாகச் சீர்கேடு, சுயநலன் கருதி பாடசாலை நலன்களைப் புறக்கணிகத்தமை மற்றும் பாடசாலைச் சொத்துக்களை சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அதிபருக்கு எதிராக மேற்படி கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் அதிபருக்கும் இடையில் பாரிய இழுபறி தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இதனால் பாடசாலையின் நிர்வாகம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்தப் பின்னணியில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினைரை நீக்கி விட்டு, புதிய நிர்வாகமொன்றினை தெரிவு செய்வதற்காக, எதிர்வரும் 26ஆம் திகதி – பாடசாலை அபிருத்திச் சங்கத்தின் பொதுக்கூட்டத்துக்கு அதிபர் அவசரமாக அழைப்பு விடுத்துள்ளார் என, தற்போதைய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அல் முனீறா பாடசாலை அதிபருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவரின் தரப்புக் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக அவரை தொலைபேசி வழியாகவும், குறுஞ்செய்தி மூலமும் தொடர்பு கொண்டபோதும், அவரிடமிருந்து பதில்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்