அம்பாறை மாவட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி; அதாஉல்லா கடும் எதிர்ப்பு: வாய்மூடியிருந்தார் முஷாரப்

🕔 February 28, 2022

ம்பாறை மாவட்டத்தின் பெயரை ‘திகாமடுல்ல’ என மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (28) நடைபெற்ற போது, ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறித்த யோசனையை முன்வைத்தார்.

இதனையடுத்து ராஜாங்க அமைச்சருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாதாந்தம் நடைபெறும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், ராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோருக்கு இடையில் அடிக்கடி முரண்பாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படுவது வழமையாகும்.

இவ்வாறன நிலையில் இந்த வாக்குவாதம் பல நிமிடங்கள் நீடித்ததாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் நிருவாக ரீதியாக ‘அம்பாறை’ என்றும், தேர்தல் மாவட்டமாக ‘திகாமடுல்ல’ எனவும் இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நிருவாக ரீதியாகவும் ‘திகாமடுல்ல’ எனும் பெயரை சூட்டுவதற்கான யோசனையே இன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் தற்போது கலந்துரையாட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன்  “இது விரிவாக கலந்துரையாடப்பட வேண்டிய விடயம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க ஆத்திரமடைந்ததை அடுத்தே, இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பெயர் மாற்ற யோசனைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். நௌசாத்தும் இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டார்.

எனினும் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் ரி. கலையரசன் உள்ளிட்ட சிறுபான்மையின பிரதிநிதிகள் எவரும் எந்த கருத்தினை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் அம்பாறை முக்கியமானதாகும்.

நன்றி: விடியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்