அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

🕔 February 11, 2022

ரச வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு ஒசுசல (இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம்) விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 04 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று (10) இரண்டு தடை உத்தரவுகளை பிறப்பித்தது.

தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்களின் பராமரிப்பு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள அவல நிலைமைகளின் அடிப்படையில், தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தாம் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், இந்த தடை உத்தரவு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்வதற்கு சட்ட உதவியை நாடவுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு அமைவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வேலை நிறுத்தங்கள் தொடர்பில், சுகாதார அமைச்சு தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments