கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன்

🕔 February 8, 2022

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார்.

“ஹிட்லர் தனது கடைசி காலத்தில் – ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்” எனவும் இதன்போது சாணக்கியன் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

“நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

நான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தபோது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சில காணொளிகளைப் பார்த்தேன்.

இதில் ஒன்றில், ஹிட்லரைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஆட்சி செய்ய வேண்டும் என்றுக் கூட ஒருசிலர் கூறியிருந்தனர். உண்மையில், இன்று ஹிட்லரைப் போன்றுதான் ஜனாதிபதி ஆட்சி நடத்தி வருகிறார். ஹிட்லர் தனது கடைசி காலத்தில் ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்.

அதேபோன்றுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பட்டு வருகிறார். ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இன்று நாட்டில் நீதிக்கு என்ன நடந்தது எனும் கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் இன்று பொருளாதார யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவினர் தோல்வியடைந்து வருகின்றனர்.

அத்தோடு, கருப்புப் பணத்தைக் கொண்டு வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். சரியாயின் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.

வடகொரியா என்பது பொருளாதாரத் தடைக்குட்பட்ட நாடாகும். இந்தநாட்டிலிருந்து எவ்வாறு கருப்புப் பணத்தை கொடுத்து ஆயுதம் வாங்கமுடியும்?

நாம் அரசாங்கத்திடம் கேட்பது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். நாம் எந்தக் காரணம் கொண்டும் இன்னொரு நாட்டைக் கோரவில்லை. இலங்கையை பிரித்துத் தர வேண்டும் என்றுக் கோரவில்லை.

மாறாக பிரிக்கப்படாத ஒரு நாட்டுக்குள் எமது அடிப்படை உரிமைகளையே நாம் கோருகிறோம். இதனை அரசாங்கம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதேவேளை, ரா.சாணக்கியன் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆளும் தரப்பிலிருந்த சில உறுப்பினர்கள்; “புலி, புலி” என கோசமிட்டனர்.

இதற்கு பதில் வழங்கிய சாணக்கியன்; “என்னை புலி எனக் கூறுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” எனவும் தெரிவித்தார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments