சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி

🕔 January 4, 2022

சுசில் பிரேமஜயந்தவை விடவும் வலுவான கருத்தை அண்மையில் கம்பஹாவில் வெளியிட்ட அமைச்சர் நிமல் லான்சா, ஏன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தீர்வாகாது என்றும் சிறிசேன கூறியுள்ளார்.

பிரேமஜயந்த சந்தையில் இருந்த போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு மாத்திரமே பதிலளித்ததாகவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

“மூன்று நாட்களுக்குள் லான்சா இரண்டு சிக்ஸர்களை அடித்தார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை” எனவும் சிறிசேன சுட்டிக்காட்டினார்.

“லான்சா அனைத்தையும் அறிந்தவர் என்பதால் தொடமாட்டார்கள்” எனவும் அவர் கூறினார்.

ஓர் அமைச்சரை பதவி நீக்கம் செய்வதன் மூலம், 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்வுகளை தடுக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, தம் தவறுகளை சரிசெய்தால் மட்டுமே, இதுபோன்ற நிகழ்வுகளை அரசாங்கத்தால் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்