பால்மா தேநீர் விற்பனை இனி இல்லை: சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

🕔 December 30, 2021

நாட்டிலுள்ள உணவகங்களில், பால்மாவில் தயாரிக்கப்படும் தேநீர் விற்பனையை நிறுத்துவதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பால்மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகின்ற பின்னணியிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை நாளை (31) முதல் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பை அடுத்து, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,345 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகின்றது.

அத்துடன், 400 கிராம் பால்மாவின் புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தமக்கு பால்மாவினால் தயாரிக்கப்படும் தேநீரை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஒரு வருடத்துக்கு முன்னர், 30 முதல் 35 ரூபாவாக காணப்பட்ட பால்மா தேநீரின் தற்போதைய விலை 60 முதல் 70 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த விலையேற்றத்துக்கு அமைய, ஒரு கோப்பை தேநீரை 80 முதல் 100 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்