40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு

🕔 December 29, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்த – சுமார் 40 வருடங்கள் பழைமை வாய்ந்த அரிதான நறுவிலி மூலிகை மரமொன்றினை சிலர் சட்டவிரோதமான முறையில் பிடுங்கி வீழ்த்தியுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமகன் ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

பிடுங்கப்பட்ட மரத்தை உடனடியாக உரிய இடத்தில் மீளவும் நட்டு, அரிதான மூலிகை மரமொன்றினை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை 09ஆம் பிரிவு ஊர்க்கரை வாய்க்கால் பகுதியில் பெரிதாக வளர்ந்திருந்த சுமார் 40 வருடங்கள் பழமை வாய்ந்த நறுவிலி மரமொன்றினை நேற்று (28ஆம் திகதி) சிலர் இயந்திரத்தினால் பிடுங்கி வீழ்த்தியுள்ளனர்.

நறுவிலி மரம் என்பது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட அரிதான மூலிகை மரமாகும். பிரதானமாக மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு மேற்கொள்ளப்படும் மூலிகை மருத்துவத்துக்கு நறுவிலி மரத்தின் பட்டை பயன்படுத்தப்படுகின்றது.

குறித்த மரம் பிடுங்கப்படுவதற்கு முன்னர், அதன் பட்டையினை எலும்பு முறிவு வைத்தியத்துக்காக அடிக்கடி பலர் வந்து எடுத்துச் செல்வதுண்டு.

இவ்வாறானதொரு அதி முக்கியத்துவம் வாய்ந்த மரத்தை, கொந்தராத்து தொழிலில் ஈடுபட்டு வரும் நபரொருவரின் வழி நடத்தலில் ZB 2837 எனும் இலக்கத்தையுடைய கவுண்டி இயந்திரத்தின் மூலம் நேற்று வீழ்த்தியுள்ளனர் என்று, அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தான் உடனடியாக தமது கிராமசேவை உத்தியோகத்தருக்கு தொலைபேசி மூலம் அறிவித்திருந்தும், மரத்தை மீளவும் நடுவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இன்று காலை (11.00 மணி) வரை நடைபெறவில்லை எனவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த மரத்தை உடனடியாக இருந்த இடத்தில் மீளவும் நட்டு, அரிதான மூலிகை மரமொன்றினை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்