நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச

🕔 December 21, 2021

லங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர காரணம் எனக் கூறி, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார்.

நேற்றிரவு (20) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரவன்ச; பொருளாதாரத்தை ஜயசுந்தர அழிக்கப் பார்க்கிறார் என்றும், அந்த நடவடிக்கையானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் வந்துவிடுமென்றும் கூறினார்.

பி.பி. ஜயசுந்தரவின்றி பொருளாதாரத்தை நடத்த முடியாது என்பது போல் தற்போது பலருக்கும் தோன்றுவதாக கூறிய அமைச்சர் விமல்; 70 வயதான ஜயசுந்தர திடீரென உயிரிழந்தால் பொருளாதாரத்துக்கு என்ன நடக்கும் என கேள்வி எழுப்பினார்.

“பொருளாதார நெருக்கடியைக் கையாள்வது மற்றும் அனைத்து சர்வதேச நிதி நிறுவனங்களுடனான தொடர்புகள் பற்றிய அறிவு அவருக்கு மட்டுமே இருப்பதாகத் தெரிகின்ற பி.பி. ஜயசுந்தர, ஏன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை என நான் ஆச்சரியப்படுகிறேன்” என்றும் இதன்போது அமைச்சர் வீரசன்ச குறிப்பிட்டார்.

ஜயசுந்தரவை சுற்றியிருந்தவர்கள் சித்தரிக்கும் அளவுக்கு அவர் திறமையானவர் என்றால், அவரின் கண்காணிப்பில் இலங்கை எப்படி இந்தளவு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது என்றும் அமைச்சர் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

Comments