‘மக்களுக்கு சுமை’ என கட்சித் தலைவர் விமர்சித்த வரவு – செலவுத் திட்டத்தை, போற்றிப் புகழந்த முஷாரப் எம்.பி்; நிதியமைச்சரையும் பாராட்டினார்

🕔 November 17, 2021

– முன்ஸிப் அஹமட் –

நிதியைமச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில், எளிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படக் கூடிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்துள்ளார்.

‘தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தினூடாக மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளதாக’ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் குற்றுஞ்சாட்டியுள்ள நிலையிலேயே, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் பல நல்ல விடயங்களை தன்னால் காண முடிவதாகவும், இந்த வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் பாராட்டுவதாகவும் முஷாரப் மேலும் கூறியுள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாவத்டதில் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

”உலக நாடுகள் அனைத்திலும் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து, பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை விமர்சிப்பதென்பது மனச் சாட்சிக்கு ஏற்றுக் கொள்ள முடியாததொரு விடயமாக உள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை நான் பாராட்டுகின்றேன்.

இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் காட்டப்படும் அக்கறையானது, நாட்டை வழப்படுத்த வேண்டும் என்பதில் காட்டப்படுவதில்லை.

இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நல்ல பல விடயங்களை என்னால் பார்க்க முடிகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச துறை – நாட்டுக்குச் சுமையாக இருக்கின்றது என நிதிமைச்சர் சொன்ன விடயமானது ஆழமானதாகும். அவர் சொன்னதன் அர்த்தம் எமக்கும் தெரியும். எமது நாட்டில் அனைத்து அரச கூட்டுத்தாபனங்களும் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன. அரச கூட்டுத்தாபனங்களில் 55 பேர் செய்ய வேண்டிய வேலைக்கு 1500 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே, அரச சேவை என்பது இப்போது சுமையாக மாறியுள்ளது.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் எளிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படக் கூடிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

தொடர்பான செய்தி: சண்டித்தனமான ஆட்சி; அல்லாஹ்வை நிந்தித்தவருக்கு தலைமைப் பதவி: அரசாங்கத்தை கடுமையாகச் சாடி நாடாளுமன்றில் றிசாட் உரை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்