சிங்களம் தெரியாதவருக்கு உதவப் போனதால் சாட்சியாளராக மாறிய நபர்; ஆசாத் சாலி வழக்கில் நேற்று நடந்தவை

🕔 November 12, 2021

– எம்.எப்.எம். பஸீர் –

சாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையானால் தன்னையும் சி.ஐ.டி.யினர் கைது செய்துவிடுவார்களோ எனும் பயத்தில், சி.ஐ.டி.யினர் வினவிய சந்தர்ப்பத்தில் அசாத் சாலியின் கருத்து தவறானது என வாக்கு மூலமளித்ததாக பொது மகன் ஒருவர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த, திஹாரி பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் பிஸ்ருல் ஹாபி மொஹம்மட் ரிஸ்வான் எனும் நபரே, ஆசாத் சாலி சார்பில் குறுக்கு விசாரணை செய்த ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் கேள்விகளுக்கு பதிலளித்து இதனை தெரிவித்தார்.

அத்துடன், அசாத் சாலியை தனக்கு தெரியும் என கூறிய சாட்சியாளர், நீதிமன்றில் அசாத் சாலி இருந்த போதும், அவரை அடையாளம் காண தவறினார்.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று 03ஆவது நாளாகவும் இடம்பெற்றது. இதன்போது வழக்குடன் தொடர்புபட்ட, ஆசாத் சாலி கடந்த 2021 மார்ச் 10 ஆம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் முழுமையான பதிவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும், இரு தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட செய்திகளின் வடிவமும் நீதிமன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நேற்று சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விளக்கமறியல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவில், சிறைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வரும் ஆசாத் சாலி நேற்று 11 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றுக்கு, சக்கர நாட்காளியில் ஆயுதம் தரித்த சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில், அசாத் சாலிக்கு எதிரான சாட்சி விசாரணைகள் நேற்றும் தொடர்ந்தன்.

ஏற்கனவே 5 சாட்சியாளர்களின் சாட்சியங்கள் கடந்த 2,9 ஆம் திகதிகளில் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதலில் பெளத்த கேந்திர மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அங்குனுகொல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர் சாட்சியமளித்தார்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதுடன், ஆசாத் சாலிக்காக மன்றில் அசான் நாணயக்கார, சரித்த குணரத்ன ஆகிய சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.

ஜினாநந்த தேரர் சாட்சியம்

இந்நிலையில் சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேராவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு ஜினாநந்த தேரர் சாட்சியமளித்ததுடன், 2 தொலைக்காட்சிகளின் பெயர்களைக் கூறி, குறித்த தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்திகளில் கடந்த 2021 மார்ச் 10 ஆம் திகதி செய்தி அறிக்கைகளை பார்த்த பின்னரேயே ஆசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானித்ததாக குறிப்பிட்டார்.

அத்துடன் குறுக்கு விசாரணைகளின் போது, ஆசாத் சாலியின் முழுமையான ஊடக சந்திப்பின் மிகக் குறைந்த கால அளவினைக் கொண்ட பகுதியை ஒளிபரப்புவதன் ஊடாக அதன் அர்த்தம் மாறலாம் எனவும் அவர் ஏற்றுக்கொண்டார். எனினும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட செய்தியானது, மிகத் தெளிவாக ஆசாத் சாலி இனங்களுக்கு இடையே பகைமையை தூண்டும் வண்ணம் மைந்திருந்ததாக ஜினாந்த தேரர் சாட்சியமளித்தார். தொலைக்காட்சியில் எதனை ஒளிபரப்புவது என்பதை தீர்மானிக்கும் இயலுமை ஆசாத் சாலிக்கு இல்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

ஜினாநந்த தேரரின் சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்யும் போது, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஒரு கட்டத்தில் கடும் தொனியில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு சாட்சியாளர் ஜினாநந்த தேரரை எச்சரித்தார்.

இந்நிலையில் ஜினாநந்த தேரரைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் தினித் சமில்க சம்பத் சாட்சியமளித்தார். குறித்த தினம் தான் அசாத் சாலியின் ஊடக சந்திப்பில் செய்திகளை சேகரித்ததாகவும், தான் பதிவு செய்த ஒளிப்பதிவை அப்படியே தான் நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், எதனை ஒளிபரப்புவது, எதனை விடுவது என்ற தீர்மானம் எடுக்கும் நிலையில் தான் இல்லை எனவும் அவர் சாட்சியமளித்தார்.

நான் தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதில்லை – ரிஸ்வான்

இதனையடுத்தே, திஹாரி பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் பிஸ்ருல் ஹாபி மொஹம்மட் ரிஸ்வான் என்பவரின் சாட்சியம் பெறப்பட்டது.

தமிழ் – சிங்களம் மொழி பெயர்ப்பாளர் ஒருவரின் உரைப் பெயர்ப்புடன் அந்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

இதன்போது மன்றில் சாட்சியமளித்த அவர், தான் திஹாரி பள்ளிவாசல் பகுதியில் தங்கியிருப்பதாக கூறினார். ஒரு நாள் பள்ளிவாசலுக்கு இரு சி.ஐ.டி. அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பள்ளி நிர்வாக சபை தலைவரை தேடியதாகவும், அப்போது அங்கிருந்த அவர் சிங்கள மொழி தெரியாததால், ஓரளவு சிங்களம் தெரிந்த தன்னை கதைக்குமாறி கூறியதாக குறிப்பிட்டார்.

இதன்போதே ஆசாத் சாலியின் கருத்து தொடர்பில் தன்னிடம் சி.ஐ.டி. வாக்கு மூலம் பெற்றதாகவும், தான் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே சாட்சியாளர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் தமிழ் மொழி மூலமாகவே குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை விஷேட அமசமாகும்.

இதன்போது பதிலளித்த சாட்சியாளர், தனக்கு தனது பெயரை மட்டுமே எழுதத் தெரியும் எனவும், சி.ஐ.டி.யினர் அவர்களே எழுதிய வாக்கு மூலத்தில் கையெழுத்து பெற்றதாக கூறினார்.

இதன்போது ஆசாத் சாலியின் கருத்து தவறானது என சி.ஐ.டி. வாக்கு மூலத்தில் தெரிவித்தமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் வினவப்பட்டது. அதற்கு பதிலளித்த சாட்சியாளர், அசாத் சாலியின் கருத்தை தான் சரி கண்டால், தன்னையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற பயத்தில் தான் அவ்வாறு தெரிவித்ததாக கூறினார்.

இந்நிலையிலேயே மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற வழக்கு

முன்னதாக அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் எச்.சி./2778/2021 எனும் இலக்கத்தில் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் ஆசாத் சாலிக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த வழக்கே நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டுக்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) ( ஈ ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை ஆசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.சி.சி.பி.ஆர் கீழும் குற்றச்சாட்டு

அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

56 சாட்சியாளர்கள்

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக சட்ட மா அதிபரால் 56 சாட்சியாளர்களின் பெயர் பட்டியல் மேல் நீதிமன்றுக்கு பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  சான்றுப் பொருட்களாக இறுவெட்டுக்கள், மெமரி சிப் , ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்ட மா அதிபரால் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்