நாடாளுமன்ற அமர்வுகள், சைகை மொழியிலும் இனி ஒளிபரப்பப்படும்: பெண் உறுப்பினர்களின் முயற்சிக்கு பலன்

🕔 November 11, 2021

நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமை தொடர்பில் சாபாநாயகருக்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாக குறித்த ஒன்றியத்தின் தலைவி வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றபோது, ராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இதற்கமைய இவ்வருட வரவு – செலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்வைத்த யோசனைக்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு இணக்கம் தெரிவித்திருந்தது.

இதன்படி எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்டம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் போதும், வரவு – செலவுத்திட்ட விவாத காலப்பகுதியில் இடம்பெறும் நேரடி ஒளிபரப்புக்குச் சமாந்தரமாகவும் சைகை மொழிக்குத் தனியான கட்டமொன்று வழங்கப்படவுள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்போது நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தெரியப்படுத்துவதுடன், குறைபாடுகளுடன் கூடிய நபர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிததுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்