நாட்டில் மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்: தந்தை, தாய், மதகுருமார்களும் குற்றத்தில் ஈடுபடுகின்றனர்

🕔 October 19, 2021

நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, ​​ நாளொன்றுக்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

அதாவது, ஒரு மணித்தியாலத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரிந்தால், 21%மானோர் 05 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், 17% மானோர் 05 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் , 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 75 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 வீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நாளாந்தம் சுமார் 06 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றார்கள் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்