உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

🕔 October 1, 2021

லக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 10ஆயிரம் கோடி ரூபா) கடனை இலங்கை பெறும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று அறிவித்தார்.

கிராமப்புற வீதிகள், விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் உலக வங்கியின் நிர்வாக பணிப்பாளர்கள் குழு, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அங்கீகாரம் அளித்துள்ளது என, உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள கிராமப்புற சமூகங்களில் வாழும் சுமார் 16 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெற்காசியாவிலேயே இலங்கையில் அதிக சாலை விபத்துகள் நிகழ்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள உலக வங்கி, இதனால் ஆண்டுக்கு சுமார் 3,000 மரணங்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

கிராமப்புற சமூகங்களை சுகாதாரம், கல்வி மற்றும் பிற பொருளாதார வாய்ப்புகளுடன் இணைக்கவும், சிறு விவசாயிகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கவும் தடையற்ற வீதிகள் முக்கியமானவை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் 100,000 கிலோமீற்றர் தூரமுடைய கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இது அரசின் தேசிய வளர்ச்சி மூலோபாயத்தின் கீழான – முக்கியமானதொரு முயற்சியாகும் எனவும் உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடன் 10 வருட சலுகைக் காலம் உட்பட 28 வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டியது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்