மு.காங்கிரஸை அண்ணன் – தம்பி நடத்தும் கம்பனி போல் ஆக்கியுள்ளனர்: ஹக்கீம், ஹஸீர் குறித்து, முன்னாள் எம்.பி மன்சூர் காட்டம்

🕔 September 30, 2021

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பேரியக்கம் என்பதை மறந்து, அந்தக் கட்சியை அண்ணன் – தம்பி நடத்தும் ஒரு கம்பனியைப் போல் கொண்டு நிறுத்தி இருக்கிறார்கள்” என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் எம்ஐஎம். மன்சூர் தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம் காங்கிரஸுக்குள் – இடைநடுவில் பிழைப்புக்காக வந்தவர்கள், அந்தக் கட்சியின் லட்சியங்களை மறந்தவர்களாகக் கருத்துச் சொல்லும் முறைமை ஒழிக்கப்பட வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரரான ரஊப் ஹஸீர் என்பவர், அண்மையில் கிழக்கு மாகாண மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக எழுதியதோடு, அவர்கள் ‘தேவடியாள்’தனமான நடத்தையுடையவர்கள் என்றும் ‘பேஸ்புக்’ பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஹஸீருக்கு எதிராக பல்வேறு மட்டங்களிலிருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தன.

இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், ரஊப் ஹஸீரின் எழுத்துக் குறித்து கருத்துக் கேட்டபோதே, அவர் மேற்கண்ட பதிலை வழங்கியிருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ரஊப் ஹஸீர் பயன்படுத்திய வார்த்தை மிகவும் அற்பமானது – கேவலமானது. அந்த இடத்தில் ‘கிழக்கு’ என்ற வசனத்தையும் ‘தேவடியாள்’ தனமுடையது என்கிற வசனத்தையும் அதுவும் மு.காங்கிரஸ் தலைவரின் சகோதரராக இருந்து கொண்டு பயன்படுத்தியிருக்கக் கூடாது.

மு.காங்கிரஸ் ஒரு தேசிய இயக்கம். பல போராட்டங்களையும் தியாகங்களையும் சந்தித்துள்ளது. இந்தக் கட்சிக்குள் இடைநடுவில் பிழைப்புக்காக வந்தவர்கள் – லட்சியங்களை மறந்தவர்களாக கருத்துச் சொல்லும் விடயம் ஒழிக்கப்பட வேண்டும்.

அதுவும் தலைவருக்கு ஆளே இல்லை. இந்தக் கட்சி ஒரு பேரியக்கம் என்பதை மறந்து, அண்ணன் – தம்பி நடத்தும் ஒரு கம்பனி போல், அதனைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்கள். மிக வேதனையுடன் இதனை நான் பார்க்கிறேன்.

தலைருக்கு ஹஸீர் சகோதரனான இருக்கலாம். அதற்காக கட்சி போராளிகளினதும் மக்களினதும் அதிலும் குறிப்பாக கிழக்கானின் மனதை உடைத்து, உணர்வுகளோடு விளையாடுவதை இவர்கள் தவிர்த்துக் கொள்ளதல் வேண்டும். எதிர்காலம் நிச்சயமாக இதற்குப் பதிலளிக்கும்” எனக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்