நாட்டில் 50 லட்சம் கிலோ உணவு தினமும் வீணடிக்கப்படுகிறது: சுற்றாடல் துறை அமைச்சர் தகவல்

🕔 September 29, 2021

லங்கையில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5,000 மெட்ரிக் டொன் (50 லட்சம் கிலோகிராம்) சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகுவதாக, சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் ‘அரிசி’ அரசியல் வார்த்தையாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

‘உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசு குறைப்பு’ குறித்த சர்வதேச விழிப்புணர்வு தினத்தையொட்டி, சுற்றாடல் துறை அமைச்சில் இன்று (29) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

“உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் தகவல்படி, மனித நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகிறது. அது ஒரு வருடத்துக்கு 1.3 பில்லியன் டொன் ஆகும். பயிர்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உணவில் சுமார் 40 சதவீதமானவை நம் நாட்டில் வீணாகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 5,000 மெட்ரிக் டொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவுகள் குப்பையாக வீசப்படுகின்றன”என்றும் அவர் கூறினார்.

இந்த சூழ்நிலையால் நாடு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகக் கூறிய அவர், உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

“எனவே, 2030ஆம் ஆண்டுக்குள் உணவு வீணாகுவதை 50 சதவீதம் குறைக்கத் தீர்மானித்துள்ளோம்” என்றும், உலகில் சுமார் 820 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதன்போது அமைச்சர் கூறினார்.

உலக மக்களுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், முறையற்ற விநியோகம் காரணமாக, ஏராளமான மக்கள் தங்கள் உணவை இழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உணவு கழிவுகளால் ஏற்படும் உலகளாவிய பொருளாதார இழப்பு 939 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்