பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீசி தாக்குதல்: கன்னத்தில் அறையப்பட்ட நிகழ்வு நடந்து 03 மாதங்களின் பின்னர் மற்றொரு சம்பவம்

🕔 September 28, 2021

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (28) அந்த நாட்டில் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸின் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் எமானுவேல் மக்ரோங்கை நோக்கி எறியப்பட்ட முட்டை அவரது தோளில் வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த முட்டை உடையவில்லை.

இந்த நிகழ்வின்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘லிவே லா ரெவொல்யூஷன்’ (புரட்சி நீடித்து வாழ்க) என்று முழங்குவதையும் கேட்க முடிகிறது.

அந்த வீடியோவில் எமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசப்பட்டதும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் அவரை நெருங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. அந்த கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அங்கிருந்து காவலர்களால் அழைத்துச் செல்லப்படுவதையும் அந்தக் காணொளி காட்டுகிறது.

ஜனாதிபதி மீது முட்டை வீசியதற்காக சர்வதேச உணவு மற்றும் விடுதிகள் தொழில் கண்காட்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“என்னிடம் அவர் ஏதாவது சொல்ல விரும்பினால், அவர் வந்து சொல்லலாம்,” என்று அப்போது ஜனாதிபதி சொன்னதைக் கேட்க முடிந்ததாக அங்கிருந்த செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஜனாதிபதி மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்திய நபர் குறித்த அடையாளங்கள் அல்லது அவரது நோக்கம் குறித்த தகவல் எதுவும் அதிகாரிகளால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஜூன் மாதம் பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நடந்த நிகழ்வு ஒன்றின்போது அங்கிருந்த ஒருவரால் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார். அவரைத் தாக்கிய நபர் நான்கு மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்தில் அறையும் போது, “மக்ரோங் ஒழிக” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

ஜனாதிபதி தாக்கப்பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் வேறுபாடுகள் கடந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

வீடியோ

தொடர்பான செய்தி: பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்