காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி

🕔 September 11, 2021

– பைஷல் இஸ்மாயில் –

டைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் தவறாகும் என்று திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளதோடு, இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த நாட்டில் அமுலில் உள்ளது. இதனை அடிப்படையாக வைத்தே காதி நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த ஒல்லாந்தரோ ஆங்கிலேயரோ கூட இந்த விடயத்தில் கை வைக்கவில்லை. எனினும், இந்த அரசாங்கம் – காதி நீதிமன்றங்களை ஒழிக்கும் பாரிய வரலாற்றுத் தவறைச் செய்ய முனைகின்றது. இது குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

காதி நீதிமன்ற அமைப்புகளில் குறைபாடுகள் இருப்பின் அதனை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, முற்றாக ஒழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது.

காலுக்கு வாங்கிய செருப்பு சிறியது என்பதற்காக, செருப்பை மாற்றாமல் செருப்புக்கேற்ப காலை வெட்டுவது போன்ற செயலாகவே இது அமைந்துள்ளது. இந்த செயற்பாடு  ஆரோக்கியமானதல்ல. 

ஆண்டாண்டு காலமாக அமுலில் இருந்து வரும் இந்த காதி நீதிமன்ற முறையை ஒழிக்கப் போவதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தும் முஸ்லிம் கட்சிகள் எவையும் இது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம் கட்சிகளை உருவாக்கியதாகக் கூறுகின்றார்கள். முஸ்லிம்களின் வாக்குகளினாலேயே அந்தக் கட்சியினர் நாடாளுமன்றத்துக்கு வந்தார்கள். தேர்தல் காலங்களில் இந்த அரசாங்ககத்துக்கு எதிராக மோசமான பிரச்சாரங்களை முன்வைத்த இவர்கள், இப்போது இந்த அரசாங்கத்தோடு ஒட்டியிருக்கின்றார்கள். 

காதி நீதிமன்றத்தை ஒழிக்கப் போவதாக அரசாங்கம் தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளது. இது முஸ்லிம்களது உரிமை இல்லையா? ஏன் இன்னும் மௌனமாக இருக்கின்றீர்கள் என்று நான் முஸ்லிம் கட்சிக்காரர்களைக் கேட்க விரும்புகின்றேன்.

முஸ்லிம் கட்சிகளின் மௌனத்தை பார்க்கும்போது, அவர்களின் சம்மதத்தோடு தான் இந்த விடயம் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுத்துகின்றது.

எனவே அரசாங்கத்தின் இந்த வரலாற்றுத் தவறுக்கு துணை போகும் செயற்பாட்டிலிருந்து முஸ்லிம் கட்சிகள் விடுபட வேண்டும். தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்