அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: தலிபான் தெரிவிப்பு

🕔 August 26, 2021

மெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

மேலும், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் எவ்வித ஆதாரமும் இல்லையென்றும் ஆப்கன் மீதான போருக்கு இந்த சம்பவம் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்; “அமெரிக்கர்களுக்கு லேடன் இடையூறாக கருதப்பட்டபோது அவர் ஆப்கனில்தானில் இருந்தார். ஆனால், அவரும், இந்த ஆப்கன் மண்ணும் எவர் ஒருவருக்கும் எதிரியாக செயல்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

இதன் போது பெண்களின் உரிமைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது; “பெண்களை நாங்கள் மதிக்கின்றோம். அவர்கள் எங்களின் சகோதரிகள். அவர்கள் பயப்படக்கூடாது. நாங்கள் தேசத்துக்காக போராடியுள்ளோம். அவர்கள் இதை நினைத்து பெருமைப்பட வேண்டும்” என்றார்.

ஓகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்