நாமல் ராஜபக்ஷ பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார்: ஒலிம்பிக் வீரர் நிமாலி குற்றச்சாட்டு

🕔 August 10, 2021

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் வலிவர்ஷா நிமாலி லியனாராச்சி – தனது காலணிகளை மறந்து வீட்டில் வைத்துச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

விளையாட்டு வீரரொருவர் தனது காலணிகளை மறந்து வீட்டில் வைத்துச் விட்டுச் சென்றதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“நான் கையில் வைத்திருந்த பயணப் பொதியில்தான் எனது காலணிகளைக் கொண்டு சென்றேன். நான் அவற்றை முக்கியான பயணப் பொதியில் கூட வைக்கவில்லை. ஏனென்றால் என் காலணிகள் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும்”எனக் கூறியுள்ள நிமாலி; “எனது காலணிகளை நான் மறந்துவிட்டேன் என்பது பொய்யானது” என, விளையாட்டுத் துறை அமைச்சரின் கூற்றுக்குப் பதிலளித்துள்ளார்.

தன்னிடம் பழைய சோடி காலணி இருந்தபோதிலும், புதிய சோடி காலணியை வாங்க விரும்பியதாகவும் லியனாராச்சி மேலும் குறிப்பிட்டார். ஆயினும் டோக்யோவில் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே செல்ல முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, புதிய ஜோடி காலணியொன்றை வாங்குவதற்கான தனது விருப்பத்தை இலங்கை ஒலிம்பிக் குழு அதிகாரிக்கு தான் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளையாட்டு துறை அமைச்சர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் லியனாராச்சி கூறியள்ளார். “உண்மை அவருக்கு தெரிவிக்கப்படவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க; நிமாலி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை வாபஸ் பெய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்