‘கல்வியை ராணுவ மயமாக்கும்’ என அஞ்சப்படும், ‘கொத்தலாவல சட்டமூலம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

🕔 July 11, 2021

நாடாளுமன்றில் அவசரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் – அமுலுக்கு வருமாயின், பாடசாலை மட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் – கல்வி ராணுவமயமாகும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த சட்டம் மூலம் தொடர்பில் டொக்டர் ஷெரில் நிமேஷ்கா பெனாண்டோ (Dr Sheril Nimeshka Fernando) என்பவர் ஆங்கிலத்தில் எழுதி, முஹம்மட் நாஸிக் (Mohammed Nazik) என்பவர் தமிழில் மொழி பெயர்த்த பதிவு ஒன்றினை வழங்குகின்றோம்.

கொத்தலாவல சட்டமூலம் என்றால் என்ன?

 1. உயர் கல்வி அமைச்சு
 2. கல்வி அமைச்சு
 3. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
 4. தொழில்முறை தர நிலைகள் நிறுவனம் (உ+ம் – S L M C , I E S L )
 5. பல்கலைக்கழக செனட் சபை மற்றும் கட்டுப்பாட்டுச் சபை

என – இந்த அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரங்களை ஒரு சபைக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்?

அந்த சபையின் 10 உறுப்பினர்களில் 5 பேர் ராணுவ அதிகாரிகள், இருவர் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர்கள், மிகுதி மூவரும் அரசியல் நியமனங்கள்.

இத்தோடு முடியவில்லை, இன்னும் இருக்கிறது.

 1. தற்போது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் 1978 – பல்கலைக்கழக சட்டமூலம் இந்த சபைக்கு எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது.
 2. எந்தவொரு தனியார் பல்கலைக்கழகத்திற்கும் இந்த சபையின் அனுமதியைப் பெற்று கொத்தலாவலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டம் வழங்கும் அந்தஸ்தை (Degree awarding status) பெற்றுக்கொள்ள முடியும்.
 3. இந்த சபையினால் அனுமதிக்கப்படும் பட்டங்களுக்கு தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் அங்கீகாரம் தேவை இல்லை. தமது பட்டங்கள் தரம் சிறந்தது என்று அந்த சபைக்கே தீர்மானிக்க முடியும்.
 4. இந்த சபையானது பாதுகாப்பு அமைச்சருக்கு மட்டுமே பொறுப்புக் கூறும். நிதி ஒழுங்கமைப்பு, கணக்காய்வு தாங்களே செய்து கொள்ளலாம். தாம் வழங்கும் பட்டங்களின் விலையை தீர்மானிப்பதும் இந்த சபையே ஆகும்.
 5. பல்கலைக்கழகங்கள் மட்டுமல்ல பாடசாலைகள் அமைக்கவும், அவற்றின் பாடத்திட்டங்களைத் தீர்மானிக்கவும், பரீட்சைகளை நடத்தவும் முழு அதிகாரம் இந்த சபைக்கு உண்டு. கல்வி அமைச்சுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.

இந்த சட்டமூலத்தில் உள்ள இன்னுமொரு பந்தியைப் பற்றியும் கூறவேண்டும்.

 • பல்கலைக்கழகங்களுக்கு உள்ளே நடக்கும் எந்தவொரு எதிர்ப்பின் போதும், தமக்கு சரியானது என தீர்மானிக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்து அடக்கிட, பாதுகாப்பு அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதாவது எந்தவொரு அநீதியின் போதும் தலை சாய்த்துக்கொண்டு இருந்திடவேண்டும்.

ராணுவ மயமாகும்

அவசர அவசரமாக இந்த நாட்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் ‘கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தின்’ சாராம்சமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல்வாதிகளால் முழுமையாக அழிக்கமுடியாது போன இரண்டு விடயங்கள் உள்ளன.

 1. இலவச கல்வி
 2. இலவச சுகாதாரம்

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இதனோடு அதுவும் முடிவுக்கு வந்துவிடும் . ஆனால் கல்வியை விற்பதைவிட, அதி பயங்கரமான விளைவுகள் இதன் மூலம் நடக்கும். அது பாடசாலை மட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் கல்வியை ராணுவமயமாக்கும் செயலாகும்.

சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய, சரி/பிழை காணக்கூடிய மக்களுக்கு பதிலாக, கட்டளைகளை ஏற்று அடிபணியும், முதுகெலும்பில்லாத பரம்பரையொன்று எதிர்காலத்தில் காணக்கூடியதாகவிருக்கும்.

Comments