ஹைட்டி ஜனாதிபதி படுகொலை: மனைவியும் படுகாயம்

🕔 July 7, 2021

ஹைட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவானெல் மோசே அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அந்நாட்டின் இடைக்காலப் பிரமர் கிளாடி ஜோசப் தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்கள் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்ஸில் உள்ள மோசேவின் வீட்டை முற்றுகையிட்டுத் தாக்கியதாக ஜோசப் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஜனாதிபதியின் மனைவியும் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில் “நாட்டில் நிலைமையைச் சமாளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என ஜோசப் கூறியுள்ளார்.

53 வயதான மோசே 2017-ஆம் ஆண்டு பெப்ரவரி தொடக்கம் ஹைட்டியின் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். முந்தைய ஜனாதிபதி மார்ட்டெல்லி பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது.

அவரது பதவிக் காலத்தில் அவரின்அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பதவி விலகக் கோரி வன்முறைப் போராட்டங்கள் நடந்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்திலும் மோசே பதவி விலக வேண்டும் என்று கோரி, தலைநகரிலும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த பெப்ரவரி மாதத்துடன் மோசேவின் பதவிக் காலம் முடிந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் தாம் தாமதமாகவே பதவியேற்றுக் கொண்டதால், மேலும் ஓராண்டு காலம் பதவியில் நீடித்திருக்கப் போவதாக மோசே அறிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்