போகோ ஹராம் தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல்

🕔 June 7, 2021

நைஜீரியாவைத்  தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் (Boko Haram) அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷேகாவ் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கின்றன.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் அமைப்பு 2002ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான மைதுகுரியில் முகம்மது யூசுஃப் என்பவரால் தொடங்கப்பட்டது.

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வசித்து வரும் நைஜீரியாவில் 1999-ல் ஆட்சி அமைத்த மதச்சார்பற்ற ஜனநாயக அரசாங்கத்தினால் தங்களின் மத கொள்கைகளுக்கு ஆபத்து வரலாம் என்று அச்சம் அடைந்த ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள், ஆளும் அரசாங்கத்துக்கு எதிராகக் குரலை உயர்த்தின.

அதேபோல், அந்த நேரத்தில் இஸ்லாமியத் தலைவர்கள் நைஜீரியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தினர். அதனால் இரு பிரிவினருக்கும் இடையே மிகப்பெரியளவில் மோதல் வெடித்தது.

நாட்டின் வடக்கு மாநிலங்களில் ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும், மேல்நாட்டுக் கலாசாரத்தை மதச்சார்பற்ற ஜனநாயக அரசாங்கம் நைஜீரியாவில் பரப்பி வருவதாகவும் கருதிய இஸ்லாமிய மதகுரு யூசுஃப்; ‘ஜமாஅத் அஹ்ல் அஸ் ஸுன்னதி லித்தஃவதி வல்-ஜிஹாத்’ எனும் அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பே நாளடைவில் ‘போகோ-ஹராம்’ என்று பெயர் மாற்றம் அடைந்தது.

நைஜீரியாவின் பல மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய போகோ ஹராம் அமைப்பினர், பெண் குழந்தைகள் கல்வி கற்பதைக் கடுமையாக எதிர்த்தனர். 2014-ல் நைஜீரியாவின் சிபோக் கிராமத்தில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த 276 மாணவிகளைக் கடத்தி சென்றவர்கள் அவர்களை அகதிகளைப் போல நடத்தினார்கள். சிபோக் சிறுமிகளில் சுமார் 100 பேர் இன்னும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. போகோ ஹராம் அமைப்பின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்குச் சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

அதைத் தொடர்ந்து நைஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளில் காலூன்றத் தொடங்கிய ஹராம் அமைப்பினர், வெகு சீக்கிரத்திலேயே அண்டைய நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். இஸ்லாமிய மதத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அரசியல் தலைவர்களில் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரையும் கடத்தி சென்று கொலை செய்தார்கள்.

இதுவரையில், இந்த அமைப்பால் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘அனைவரும் இஸ்லாமிய மதத்தைத் தழுவ வேண்டும்’ எனும் குறிக்கோள்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு அல்-கொய்தா அமைப்பும் துணை நின்றதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, மேற்கு ஆப்பிரிக்க மாகாண இஸ்லாமிய நாடு (Islamic state west Africa province – ISWAP) எனும் அமைப்புடன் கைகோர்த்த போகோ ஹராம் அமைப்பினர், தொடர்ந்து பல்வேறு கொடூர தாக்குதல்களை நைஜீரிய அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டனர்.

நைஜீரியா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து ஹராம் அமைப்பினர் இதுவரையில் லட்சக்கணக்கில் பொதுமக்களைக் கடத்தி சென்று அகதிகளாக வைத்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபூபக்கர் ஷேகாவ் பொறுப்பிலிருந்து வந்தார்.

இந்நிலையில் ஷேகாவ் தலைமையிலான போகோ ஹராம் அமைப்புக்கும் ISWAP அமைப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே பல வருடங்களாக நடைபெற்று வரும் மோதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் நைஜீரிய வனப்பகுதியான திம்புக்து என்ற இடத்தில் முகாமிட்டிருந்த போகோ ஹராம் தலைவர் ஷேகாவை நூற்றுக்கணக்கான ISWAP அமைப்பினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது ஷேகாவ் தன் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி நிறுவனங்களின் கவனத்திற்கு வந்தன. ஆனாலும், அப்போது மரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், தற்போது ISWAP அமைப்பின் தலைவர் அபு முசாப் அல்-பர்னாவி என்பவர் போகோ ஹராம் தலைவர் மரணத்தை உறுதி செய்த ஓடியோ பதிவொன்று செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதன் மூலம், போகோ ஹராம் தலைவர் மரணம் உறுதியாகியிருக்கிறது.

அந்த ஒடியோ பதிவில் ISWAP அமைப்பின் தலைவர் அபு முசாப் அல்-பர்னாவி; ‘மே 18-ம் திகதி அன்று தங்கள் அமைப்பினர் சுற்றி வளைத்த போது ஷேகாவ் வெடிகுண்டு ஒன்றினை வெடிக்கச் செய்து இறந்ததாகவும், கடவுள் அவரை (ஷேகாவ் ) பரலோகத்திற்கு அனுப்புவதன் மூலம் நியாயந் தீர்த்திருக்கிறார். பூமியில் அவமானப்படுவதை விட ஷேகாவ் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் அவமானப்படுவதை விரும்பினார். மேலும் வெடிபொருளை வெடிக்க வைத்ததன் மூலம் அவர் உடனடியாக தன்னைக் கொன்றார் ‘ என்றும் கூறியுள்ளார்.

அல்-பர்னாவியை நன்கு அறிந்த இரண்டு பேர் ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்திடம் அந்த குரல் அவருடையது தான் என்று உறுதி செய்துள்ளனர்.

அதே போல், நைஜீரிய உளவுத்துறை அறிக்கையிலும் போகோ ஹராம் தலைவர் இறந்து விட்டார் என்று அறிவித்திருக்கின்றனர்.

கடந்த 12 வருடங்களில் பலமுறை போகோ ஹராம் தலைவர் உயிரிழந்து விட்டதாக அடிக்கடி செய்திகள் வந்து கொண்டிருந்த போதிலும், தற்போது வெளியாகியிருக்கும் தகவல் தான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்