இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு

🕔 June 3, 2021
அரபு இஸ்லாமியவாதக் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ்

ரபு இஸ்லாமிய கட்சியொன்றின் ஆதரவுடன் இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து அரசாங்கமொன்றினை அமைக்கும் சாத்தியமொன்று ஏற்பட்டுள்ளது.

‘ராம்’ (RA’AM) எனப்படும் இஸ்லாமியவாதக் கட்சி (Islamist party) உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து, இஸ்ரேலில் அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளது.

மன்சூர் அப்பாஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட மேற்படி இஸ்லாமியவாதக் கட்சிக்கு, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 04 உறுப்பினர்கள் உள்ளனர்.

அரசாங்கம் அமைப்பதற்கு 08 கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ‘யேஷ் அடிட்’ கட்சியின் தலைவர் ‘யேர் லேபிட்’ அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் படி 07 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ‘யாமினா’ கட்சியின் தலைவர் ‘நெஃப்தலி பென்னெட்’ முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார். பின்னர் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரான ‘லேபிட்’டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும்.

எதிரணியினரின் கூட்டணி அமைவது சாத்தியமில்லை என்று கருதப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சிலர் இணைந்து ஓர் உடன்பாட்டில் கையெழுத்திடம் படத்தை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

இதேவேளை காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள்; அப்பாஸ் ஒரு ‘சந்தர்ப்பவாத’ முஸ்லிம் சகோதரத்துவ இஸ்லாமியவாதி என்று குற்றம் சாட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், புதிய கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், இஸ்ரேல் அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்படும்.

அப்படி நடந்தால் கடந்த இரு ஆண்டுகளில் 05ஆவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலை உருவாகும்.

தொடர்பான செய்தி: இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின் பதவியிழக்கிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்