முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தில், சமித தேரரின் மறைவு பெரும் இழப்பாகும்: முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா

🕔 May 30, 2021

ரே தேசமாக ஒன்றிணைந்து நாட்டின் உயர்வுக்கு முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில், அனைத்து மக்களினதும் அன்பு கௌரவம் மற்றும் வரவேற்பை பெற்ற பத்தேகம சமித தேரின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பாகும் என, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம தேரரின் மரணம் தொடர்பில், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவர், மூத்த பத்திரிகையாளர் என்.எம். அமீன் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பிரபல சமூக சேவையாளர் மற்றும் மனித நேயமிக்கவருமான கண்ணியத்துக்குரிய பத்தேகம சமித தேரரின் மறைவு அனைத்து இலங்கையர்களையும் பெரும் கவலைக்குட்படுத்தியுள்ளதை நாம் அறிவோம்.

ஒரே தேசமாக ஒன்றிணைந்து நாட்டின் உயர்வுக்கு முன்னெப்போதையும் விட அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய இந்தக் காலகட்டத்தில், அவர் போன்ற அனைத்து மக்களினதும் அன்பு கௌரவம் மற்றும் வரவேற்பை பெற்ற தேரர் ஒருவர் இவ்வுலகை விட்டு மறைவது நாட்டிற்கு பெரும் இழப்பாகும்.

ஒரு சிறப்பான சமூக, அரசியல் மற்றும் மார்க்க பணியில் ஈடுபட்டிருந்த கண்ணியத்துக்குரிய பத்தேகம சமித தேரர், உள்நாட்டு வெளிநாட்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் கௌரவத்தை வென்ற தேரராவார்.

தென் மாகாண மக்களின் சமூக அபிவிருத்திக்காக மாத்திரமன்றி இலங்கையில் இனவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக நேர்மையாக முன்னின்ற அவர் – சர்வதேச ரீதியாகவும் பலஸ்தீன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் தனது குரலை எழுப்புவதற்கு பின்நிற்கவில்லை.

அவரது மறைவு தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா (MCSL) தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது முன்மாதிரி மிக்கதும் மேன்மையானதுமான தேசிய மற்றும் மதரீதியான பணிகளுக்கு உயர்ந்த கௌரவத்தை வழங்கும் வகையில், அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என உறுதியாக நம்புகிறோம்.

எல்லாம் வல்ல இறைவனின் கருணை மற்றும் அன்பு அவருக்கு கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்