முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

🕔 May 13, 2021

– முன்ஸிப் அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, கட்சியின் தீர்மானம் அல்ல என்று, மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ. எம். தாஹிர், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் ஆகிய உயர்பீட உறுப்பினர்கள் இணைந்து நேற்று புதன்கிழமை இரவு – நிந்தவூரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, இந்த தகவலை வெளியிட்டனர்.

பெருநாள் தினத்தன்று கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி, அன்றைய நாளை – துக்க தினமாக மாற்றுவதை, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் விரும்பவில்லை எனவும் இதன் போது அவர்கள் கூறினர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில், எதிர்வரும் நோன்புப் பெருநாளன்று, முஸ்லிம் மக்கள் தமது வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றுமாறு, அண்மையில் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் வேண்டுகோளொன்றினை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பிலேயே குறித்த ஊடக சந்திப்பில் – மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் மூவரும் மேற்படி கருத்தை வெளியிட்டனர்.

“கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளைக் கொடி (கபன் சீலை) போராட்டங்கள் நடைபெற்ற போது, அதில் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் உள்ளிட்ட மக்கள் கங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.

அதேபோன்று மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனின் விடுதலையை வேண்டி, கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் கூட கறுப்புச் சீலை அணிந்து தனது எதிர்ப்பினை முஷாரப் எம்.பி. வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறு சிங்கள ஆட்சியாளர்ளுக்கு தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக் கொள்ளும் அவர், முஸ்லிம்களின் பெருநாள் தினத்தை – துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எமது தலைவர் றிசாட் பதியுதீனின் விடுதலைக்காக நாம் எதையும் செய்வதற்குத் தயாராக உள்ளோம். ஆனால், கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நாள் மற்றும் அழைப்பு விடுத்துள்ள நபர் தொடர்பிலேயே எமக்கு மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.

எவ்வாறாயினும் பெருநாள் தவிர்ந்த வேறொரு நாளில் இந்தக் கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த நாமும் தயாராகவே உள்ளோம்.

இந்த கறுப்புக் கொடி போட்டத்துக்கு அழைப்பு விடுவதற்கு முன்னர், இது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் கலந்துரையாடியிருந்தால் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது.

ஆனால், தொடர்ச்சியாக கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவைத் தவிர்த்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். இது கண்டிக்கத்தக்கது.

தலைவர் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்குகு எதிராக பெருநாள் தினத்தில் கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள முஷாரப் எம்.பி, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது – கறுப்பு கொடி ஏந்தியோ அல்லது கறுப்பு சால்லை அணிந்தோ அல்லது கறுப்புச் சட்டை அணிந்தோ தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” எனவும் மேற்படி உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்