“ஜனாதிபதி ஹிட்லராக மாறுவர்”: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பேச்சுக்கு, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலடி

🕔 April 13, 2021

ந்தவொரு அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி கிடையாது என, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம; “தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லராக மாறுவார்” என பேசியமைக்கு பதிலடி வழங்கும் வகையில், ஜேர்மன் தூதுவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவிக்கையில்;

‘ஹிட்லர் ஒருவர்’ இலங்கைக்கு நன்மையளிப்பார் என்று கூறுப்படுவதை என்னால் கேட்க முடிகிறது. மில்லியன் கணக்கான இறப்புகளுடனும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மனித துன்பங்களுக்கும் விரக்திக்கும் அடால்ஃப் ஹிட்லர் தான் காரணம் என்று கூறப்படும் குரல்களை நினைவூட்டுகிறேன்.

நிச்சயமாக எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் நாட்டின் சர்வதிகாரியாக பதவி வகித்த ஹிட்லர், இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

திலும் அமுனுகம கூறியது என்ன?

“தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஹிட்லராக மாறுவார்” என்று போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

“ஜனாதிபதி ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுப்பார் என்று வாக்களித்த 69 லட்சம் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் அவ்வாறு நடந்துகொள்ளாததால் அரசாங்கம் மீது மக்கள் குறை கூறுகின்றார்கள்.

ஹிட்லர் போன்று ஜனாதிபதி செயற்பட வேண்டும் என, பௌத்த தேரர்களும் கோருகின்றார்கள்.

ஆனால், ஜனாதிபதிக்கு ஒரே தடவையில் ஹிட்லர் ஆக மாறவேண்டி இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனினும், சில பிரிவினரின் செயற்பாடுகளை அடுத்து அவர் ஹிட்லராக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ஜனாதிபதி ஹிட்லர் ஆனதன் பின்பு அரசாங்கம் மீது பழி சுமத்தப்படுவதும் நின்றுவிடும். அத்தோடு அனைத்து செயற்பாடுகளும் சரியாக முன்னெடுக்கப்படும்” எனவும் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்