ஹாபிஸ் நஸீரின் வேண்டுகோளுக்காவே, ஓட்டமாவடியில் கொவிட் ஜனாஸாகள் அடக்கம் செய்யப்பட்டன: அவரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

🕔 March 5, 2021

கொரோனாவால் மரணமானவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு ஜனாஸாக்கள் இன்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக, ஹாபிஸ் நஸீரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றில் உயிரிழந்த, ஏறாவூரைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை, ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. பெப்ரவரி 27 இல் மரணித்த உதவிப் பணிப்பாளர் கலீல் மற்றும் மார்ச் 03 இல் மரணித்த ஹஸனதும்மா ஆகியோரின் ஜனாஸாக்களே இன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

இவர்களது ஜனாஸாக்கள் இதுவரையும் குருநாகல்போதனா வைத்தியசாலையிலும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்து, ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு சிறந்த முன்மாதிரியாக ஹாபிஸ் நஸீர் செயற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிப்பதாகவும், அவரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரின் அனுமதியைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர், இன்று அதிகாலை 05.48 மணியளவில், கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்குச் சென்று ஹஸனதும்மாவின் ஜனாஸாவை வாகனத்தில் ஏற்றியவாறு ராணுவத்தின் முழு உதவியுடன் குருநாகல் போதனா வைத்தியசாலைக்குச் சென்றார்.

அங்கு வைக்கப்பட்ருந்த உதவிப் பணிப்பாளர் கலீலின் ஜனாஸாவையும் ஏற்றிக் கொண்டு, பலத்த பாதுகாப்புக்களுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஓட்டமாவடியில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய,சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, சுமார் 03.20 மணியளவில் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன எனவும், நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்