மு.கா. நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது: கல்முனை மேயர் றக்கீப் தெரிவிப்பு

🕔 March 4, 2021

– ஏ.எல்.எம். ஷினாஸ் –

கொரோனா தொற்று நோயினால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாவை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள மையவாடிகளில் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்த மாநகரசபை முதல்வர்;

“ஜனாஸாக்களுடைய எரிப்பு நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியிருந்தது. எனினும் அரசாங்கம் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அப்போது அனுமதி வழங்கவில்லை. இதனை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த ஜனாஸாக்களை எங்கே அடக்குவது? என்ன முறையில் அடக்குவது? போன்ற சுற்றுநிருபங்கள்  இதுவரை வெளியிடப்படவில்லை. இன்னிலையில்  அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல  இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இதற்கு பல தரப்பிலிருந்தும்  எதிர்ப்புக்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்றன.

முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை முஸ்லிம் மக்கள் வாழுகின்ற அவர்களுடைய சொந்த ஊரிலேயே அடக்கம் செய்வதை முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள – அடக்குவதற்கு பொருத்தமான இடங்களில் முஸ்லிம் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப் படுவதையே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றார்கள்.

இதனால் தொற்று நோய் பரவுவதாக இருந்தால் முதலில் இங்குள்ள மக்களையே அது பாதிக்கும். இதனை அம்மக்கள் பொறுப்பேற்பதற்கு தயாராக இருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் அனுமதி கிடைத்தால் முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

இப்போது முஸ்லிம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான தேவை இருப்பதுபோன்று, அபிவிருத்தி மற்றும் பிரதேசங்களின் பாதுகாப்பு போன்ற  விடயங்களையும் எதிர்பார்த்து நிற்கின்றனர். இதற்காக அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஜனாஸாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. மக்களின் நலனுக்காகவும் தேவைகளுக்காகவும் இணக்கப்பாட்டு அரசியலை இந்த கட்சி அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறது.

மக்களுடைய தேவைகள், நலன்களை கருத்தில் கொண்டு சில வேளைகளில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவற்றை மேற்கொண்டும் வந்திருக்கின்றோம்.

மக்கள் நலன் சார்ந்ததாகவே எமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம். 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. 20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கும் விவகாரம் நாடாளுமன்ற குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

முஸ்லிம் மக்களுடைய ஜனாஸாக்கள் எரிக்கப்படாமல் அடக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்