மியன்மாரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒரே நாளில் 38 பேர் பலி

🕔 March 4, 2021

மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் குறைந்தது 38 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதை ரத்தம் தோய்ந்த நாள் என்று ஐ.நாடுகள் சபை வர்ணித்துள்ளது.

மியான்மாரில் இருந்து அதிர்ச்சிகரமான காணொளிகள் வெளியாவதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானர் பர்ஜனர் கூறினார்.

பாதுகாப்புப் படையினர், ரப்பர் குண்டுகள் மற்றும் உண்மையான குண்டுகளால் சுட்டனர் என்று சாட்சிகள் கூறுகின்றன.

பெப்ரவரி 01ஆம் தகிதி மியான்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதுமுதல் மியான்மார் முழுவதும் ஒத்துழையாமை இயக்கமும், வெகுமக்கள் போராட்டமும் நடந்து வருகிறது.

ராணுவ சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும், ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட – தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகிறார்கள். ராணுவக் கிளர்ச்சி நடந்தபோது இந்த தலைவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த ராணுவக் கிளர்ச்சியும், அதைத் தொடர்ந்து போராட்டங்கள் பலவந்தமாக ஒடுக்கப்பட்டதும் சர்வதேசக் கண்டனங்களுக்கு உள்ளாயின. ஆனால், இவற்றை மியான்மார் ராணுவம் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

புதன்கிழமை நடந்த இறப்புகளைப் பார்த்த பிறகு, ஐ.நாடுகளின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்த அழைப்பு பிரிட்டன் விடுத்துள்ளது . மியான்மார் ராணுவத்துக்கு எதிராக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது பற்றி யோசித்துவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ராணுவம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என்று மியான்மாரின் அண்டை நாடுகள் கேட்டுக்கொண்டதற்கு மறுநாள், இப்படிப் போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை செய்யாமல் ராணுவம் சுட்டது

கிளர்ச்சி நடந்ததில் இருந்து இதுவரை குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஷ்ரானர் தெரிவித்துள்ளார்.

நிராயுதபாணியான தன்னார்வ மருத்துவப் பணியாளர் ஒருவரை பொலிஸ் அடிப்பது ஒரு காணொளியில் தெரிகிறது என்றும், ஒரு போராட்டக்காரர் தெருவிலேயே சுடப்படுவதை மற்றொரு காணொளி காட்டுகிறது, அந்தப் போராட்டக்காரர் இறந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தெளிவாகத் தெரியாவிட்டாலும், 9mm அரை இயந்திரத் துப்பாக்கிகளை பொலிஸ் பயன்படுத்தியிருக்கலாம் என்பது தெரிவதாக ஆயுத வல்லுநர்கள் கூறியதாகவும் ஷ்ரானர் தெரிவித்தார்.

யாங்கோன் உள்ளிட்ட பல நகரங்களில் எச்சரிக்கை ஏதும் செய்யாமல் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, மியான்மாரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் 14 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு பையன்களும் அடக்கம் என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. 19 வயது பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

“எங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கவோ, கலைந்து போவதற்கான வேறு எச்சரிக்கைகளை விடுக்கவோ இல்லை. அப்படியே துப்பாக்கியை எடுத்தார்கள். சுட்டார்கள்” என்று மொனிவா நகரப் போராட்டக்காரர் ராய்டர்ஸ் செய்தியிடம் தெரிவித்தார்.

மண்டாலேவில் பொலிஸாரும், சிப்பாய்களும், போராட்டக்காரர்களை எச்சரிக்கை ஏதும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ஒரு மாணவப் போராட்டக்காரர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தங்கள் வீட்டுக்கு அருகே காலை சுமார் 10 அல்லது 10.30 மணி அளவில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்