காதலுக்காக குடும்பத்தினர் ஏழு பேரை கொன்றவர்: சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை பெறும் முதல் பெண்

🕔 February 20, 2021

னது காதலுக்குத் தடையாயிருந்த தனது சொந்த குடும்பத்தினர் ஏழு பேரை, ஓர் இளம் பெண், ஒரே இரவில் கொன்று குவித்த கதை இது. உண்மையை அறிய அறிய அதிர்ச்சியில் ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு கொடூரமானது இந்தக் கதை.

ஷப்னம் தனது பெற்றோர், சகோதரரின் இரண்டு மகன்கள், இரண்டு சகோதரர்கள், அண்ணி, மற்றும் உறவினர் ஒருவரின் சகோதரி ஆகியோரை பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர்கள் மயக்கமடைந்த நிலையில், கோடரியால் ஒவ்வொருவராக வெட்டிக் கொன்றார்.

ஏப்ரல் 14, 2008. இந்தியாவின் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் உள்ள பாவன்கேடி கிராம மக்கள் மறக்க முடியாத நாள் அது.

ஷப்னமின் வீட்டின் அருகில் உள்ள ஏழு கல்லறைகளும் சுவர்களில் உள்ள ரத்தக் கறைகளும் இன்றும் அந்த பயங்கரமான படுகொலையை நினைவூட்டுகின்றன.

ஷப்னம் தனது குற்றத்துக்காக நீண்ட காலத்துக்கு முன்பே தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே பெரும்பாலானா கிராம மக்கள் கருதுகின்றனர்.

வீட்டின் உறுப்பினரான ஷப்னம், தனது காதலன் சலீமுடன் சேர்ந்து தனது குடும்பத்தினரைக் கொன்றதாகக் காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஷப்னம் மற்றும் சலீம் இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. இவர்களின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்த இந்தியக் குடியரசுத் தலைவர், அவர்கள் இருவரின் மரண தண்டனையை உறுதி செய்தார்.

மன்னிக்கக்கூடிய குற்றமில்லை

இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் ஷப்னமின் மாமா சத்தார், உணர்ச்சி வசப்பட்டு; “ஷப்னம் தூக்கிலிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர் செய்த குற்றம் மன்னிப்புக்குத் தகுதியற்றது,” என்று கூறுகிறார்.

“எனது தந்தை மற்றும் ஷப்னமின் தந்தை ஷௌகத் ஆகிய இருவரின் குடும்பங்களும் ஒன்றாகவே தொழில் செய்து கொண்டிருந்தன. ஷௌகத் 2000ஆம் ஆண்டுக்கு முன்பு தாஹர்பூரில் வசித்து வந்தார். அவர் இன்டர் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். பின்னர் அவர் பாவன்கேடியில் சொந்தமாக ஒரு வீடு கட்டினார்,” என்று கூறுகிறார் சத்தார்.

சத்தார், அவரின் மனைவி பாத்திமா

ஷப்னம் விவகாரம் பத்திரிகைகளின் விவாதப் பொருளானது குறித்து சத்தார் விளக்குகிறார், “ஷப்னம் மற்றும் சலீமுக்கு இடையிலான உறவு எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த இரவில், சில கிராமவாசிகள் தாஹர்பூர் வந்து என்னிடம் இந்தக் கொலைகள் பற்றிச் சொன்னார்கள். நானும் என்னுடைய மனைவியும் அங்கு சென்றதும், என் இதயம் நின்று விட்டது.

அங்கிருந்த காட்சிகள் பயங்கரமானவையாக இருந்தன. தலைகளும் உடல்களும் தனித்தனியாக வெட்டப்பட்ட சடலங்கள் அங்கு குவிந்து கிடந்தன. அண்ணன்-அண்ணி, திருமணமாகாத அவர்களின் மகன், மூத்த மருமகன் மற்றும் அவரது மனைவி – குழந்தை என அனைவரின் உடல்களும் வெட்டப்பட்டுக் கிடந்தன,” என்று அவர் விவரிக்கிறார்.

சத்தாரின் மனைவி பாத்திமாவும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். இடைமறித்துப் பேசிய அவர்; “நாங்கள் ஏற்கனவே ஷௌகத்தை அவரது மகள் பற்றி எச்சரித்திருந்தோம், ஆனால் அவர் அதை நம்பவில்லை” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றி நினைவு கூரும் பாத்திமா; “நாங்கள் பாவன்கேடியை அடைந்தபோது, அங்கு கால் வைக்கக்கூட இடமில்லை. வீட்டிற்குள்ளிருந்து இறந்த உடல்கள் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வரப்பட்டபோது, எங்களுக்கு இதயமே வெடித்து விட்டது. ஷப்னம் அனைவரையும் கோடரியால் வெட்டினார். ஆனால், அப்போது, அங்கு அழுது கொண்டிருக்கும் ஷப்னம் தான் கொலையாளி என்று யாருக்கும் தெரியாது. வீட்டை யாரோ தாக்கியதாகவே ஷப்னம் கூறிய நிலையில், பொலிஸ் விசாரணையில்தான் இந்தக் கொடுமையான உண்மை வெளியானது” என்று தெரிவித்தார்.

சத்தார் கூறுகிறார்; “இந்த கொலையில் ஷப்னம் தனது ஒன்று விட்ட சகோதரரைச் சிக்க வைக்கத் திட்டமிருந்தார். அவர் தனது தந்தையின் சொத்துக்கான மொத்த உரிமையுடன் சலீமுடன் வாழ விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை, அவர் பிடிபட்டார்”.

தினமும் ஒரு லீட்டர் பால் தான் அந்தக் குடும்பத்துக்கு வழக்கமாக வாங்கப்படும் நிலையில், சம்பவ தினத்தன்று இரண்டு லீட்டர் பால் வாங்கப்பட்டுள்ளது. பாலில் மயக்க மருந்து கலந்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார் ஷப்னமின் சித்தப்பா.

பொலிஸ் விசாரணையில் சலீமுடன் ஷப்னம் வீட்டுக்குச் சென்றபோது அனைவரும் மயக்கத்தில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் சலீம் அவருடன் இருந்தார். ஆனால் ஷப்னம்தான் ஏழு பேரையும் கோடரியால் வெட்டியுள்ளார். கொலை மற்றும் சதித்திட்டத்தில் ஷப்னமுக்கு உதவியதால், சலீமுக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் பாவன்கேடி கிராமத்தில் இந்தக் கொடூரக் கொலை விவாதிக்கப்படுகிறது.

பயங்கரமான காட்சி

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இரவே அங்கு சென்ற பாவன்கேடியைச் சேர்ந்த ஷாஜாத் கான் பிபிசியிடம் பேசுகையில்; “இரவில் மழை பெய்யத் தொடங்கியது. முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், வீட்டுக்குள் செல்லத் தொடங்கினர். மக்கள் படுக்கைகளை எடுத்துக்கொண்டு உள்ளே செல்லும்போது அங்கு பெரும் சத்தம் கேட்டது” என்றார்.

ஷாஜாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்றபோது, அங்கிருந்த காட்சியைக் கண்டு, அதிர்ச்சியடைந்தனர். ஏழு சடலங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தன, ஷப்னம் அழுது கொண்டிருந்தார். கிராம இளைஞரான அஃப்ஸல் கான் தானும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றதாகவும் இந்தக் காட்சிகளைத் தானும் கண்டதாகவும் கூறினார்.

கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ரியாசத் பேசுகையில்; “சம்பவம் நடந்த இரவு இரண்டு மணியளவில் நாங்கள் அங்கு வந்தோம். கண் முன் கண்ட காட்சியைப் பார்த்து நாங்கள் உடல் நடுங்கினோம். எங்களால் அங்கு இருக்க முடியாமல், திரும்பி வந்து விட்டோம். அத்தனை கோரமான காட்சி அது” என்று கூறுகிறார்.

ஷப்னம் – சலீம் உறவு

ஷப்னம் – சலீமை நேசித்ததாகவும் அவரது குடும்பத்தினர் அதை விரும்பவில்லை என்றும் குடும்பத்தாருடனான ஷப்னமின் வாக்குவாதத்துக்கு இதுவே காரணமாக அமைந்தது என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

சப்னம் – சலீம்

குடும்பத்தின் ஆட்சேபனைக்கு காரணம், ஷப்னமின் குடும்பம் படித்த மற்றும் வளமானதாக இருந்தது. ஷப்னமே எம்.ஏ. வரை படித்தார், அதே நேரத்தில் சலீமின் சமூக, பொருளாதார பின்னணி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவர் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. மரம் அறுக்கும் இயந்திரத் தொழில் நடத்தி வந்தார்.

சம்பவம் நடந்தபோது, சலீமுக்கு 25 வயது, ஷப்னமுக்கு 27 வயது. தற்சமயம், ஷப்னமுக்கு 39 வயது.

சலீமின் நண்பர் ஒருவர் கூறுகையில்; அவர் சலீமுடன் இணைந்து வியாபாரம் செய்து வந்த போதிலும், ஒருபோதும் ஷப்னம் பற்றிக் குறிப்பிட்டதில்லை என்று தெரிவிக்கிறார்.

ஷப்னமின் குடும்பத்தினருக்கு இவர்களது உறவு குறித்துக் கடும் ஆட்சேபனை இருந்ததாகக் கிராம மக்கள் தெரிவித்தனர். ஷப்னமின் தாத்தா, தனது கடைசி நாட்களில், ஷப்னம் கையால் சமைத்த உணவை உட்கொள்வதைக் கூட நிறுத்திவிட்டார்.

ஷப்னம் – சலீம் உறவு சலீமின் தம்பி ரஷீத்துக்கும் தெரிந்திருந்தது. ரஷீத் கோபமடைந்து ஷப்னமை ஒரு முறை அறைந்தார் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.

சலீமின் அண்டை வீட்டில் வசிக்கும் மஹ்முனா; “மிகவும் நல்லவனாகத்தான் இருந்தான். யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க மாட்டான். இப்போது என்ன சொல்வது? இனி அரசாங்கம் தான் நீதி வழங்க வேண்டும்” என்று கூறுகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்