ஐந்தாயிரம் தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்க, 40 பில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

🕔 December 31, 2020

– அஸ்ரப் ஏ சமத் –

த்தியதர வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கும், புதிதாக திருமணம் முடித்து வீடுகளற்ற குடும்பங்களுக்கும் என – கொழும்பு, கண்டி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 5,000 தொடா்மாடி வீடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணிக்கவுள்ளது.

இவ் வீடுகளை நிர்மாணிக்கவென நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் உள்ளுர் மற்றும் அரச நிர்மாண நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளன.

இத் திட்டத்துக்காக முதற்கட்டமாக 40 பில்லியன் ரூபாவை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சரும் பிரதம மந்திரியுமான மகிந்த ராஜபக்சவின் அனுமதியுடன் திரைசேரி ஒதுக்கியுள்ளதாக, நகர அபிவிருத்தி ராஜாங்க அமைச்சா் டொக்டா் நாலக்க கோடெகேவா தெரிவித்தாா்.

கொழும்பை அண்டிய பிரதேசங்களான ஒறுகொடவத்த, புளுமென்டால், மாலப்பே, மாக்கும்புர மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களிலும் கம்பஹாவிலும், கண்டியில் உள்ள  கெட்டம்பேயிலும் இந்த தொடா்மாடி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதற்கமைய இத்திட்டங்களை நிர்மாணிக்கவென நகர அபிவிருத்தி ராஜங்க அமைச்சரினால் ஒப்பந்தங்கள் கையளிக்கப்பட்டன.

அந்த வகையில் – மெகா இன்ஜியரிங், அக்ஸஸ், நவலோக்க, அரச பொறியியல் கூட்டுத்தாபனம், ஜோர்ஜ் ஸ்டுவாட் இன்ஜினியரிங், டுவா பிரதாா்ஸ், ஜ.சீ.சீ மற்றும் கிரிஸ்டி ஆகிய நிறுவனங்கள், வீடுகளை 02 வருட காலத்துக்குள் நிர்மாணித்து, அவற்றை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கும். 

இவ் வீடுகள் 700 – 900 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்டவையாகும். 02 படுக்கை அறைகளுடன் ஏனைய வசதிகளையும் இவ்வீடுகள் கொண்டிருக்கும்.

மேற்படி வீடுகளை கொள்வனவு செய்பவா்களுக்கு அரச வங்கிகள் ஊடாக – வீடமைப்புக் கடன்களை 6.25 வீத வட்டிக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை வசதிகளைச் செய்து கொடுக்குமெனவும், நகர அபிவிருத்தி ராஜங்க அமைச்சா்  தெரிவித்தாா்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்