பாலமுனை பொலிஸ் உத்தியோகத்தர் கொலைச் சம்பவம்: சந்தேக நபருக்கு 24ஆம் திகதி வரை விளக்க மறியல்

🕔 December 12, 2020

– முஸ்ஸப் அஹமட் –

ம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தஸ்மீம் என்பவர், தனது மாமாவான (தாயின் சகோதரர்) பொலிஸ் உத்தியோகத்தர் தஸ்மீக் என்பவரை கடந்த புதன்கிழமை கத்தியால் குத்தி கொலை செய்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

“உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மருமகன்தான் (சகோதரியின் மகன்) சந்தேக நபராவார்.

மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மூத்த சகோதரனுடைய மகனை சந்தேக நபர் தொடர்ச்சியாக பிரச்சினைப்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து இறந்தவரின் மூத்த சகோதரர் (இவரும் சந்தேக நபருக்கு மாமா) சந்தேக நபரிடம் சென்று இது குறித்து பேசியிருக்கிறார். அப்போது சந்தேக நபர் சண்டைக்குச் சென்றுள்ளார்.

இதனைக் கேள்வியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தஸ்மீக் சம்பவ இடத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது சந்தேக நபரின் கையில் கத்தி இருந்துள்ளது. தனது அருகில் வந்தால் குத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்த போதும், சந்தேக நபர் தனது மருமகன் என்பதால் அவரின் அருகில் தஸ்மீக் சென்றுள்ளார். இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் தஸ்மீக்கின் இடது பக்க மார்புப் பகுதியில் சந்தேக நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனைத் தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தஸ்மீக்கின் மூத்த சகோதரர் மற்றும் அவரின் மகன் ஆகியோரின் கைகளிலும் சந்தேக நபர் குத்தியுள்ளார்.

இதனையடுத்து காயப்பட்ட மூவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் தஸ்மீக் மரணமடைந்தார்” என, சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் அறிவுறுத்தலின் கீழ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிமால் வழங்கிய வழிகாட்டுதலுக்கமைவாக, பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமயில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஆஸாத், ஜயசுந்தர, இஸ்மாயில் மற்றும் ரணவீர ஆகியோர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போதே, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்