ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல்

🕔 December 1, 2020

ரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியதாக ஈரான் நம்புகிறது.

மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என ஈரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

2000ஆம் ஆண்டுகளில், ஈரானின் அணுசக்தி திட்டங்களில், மொஹ்சென் ஃபக்ரிஸாதே முக்கிய பங்கு வகித்தார்.

அணு ஆயுதங்களை ஈரான் மேம்படுத்திவிடக் கூடாது என்கிற நோக்கில், பல மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், தன்னுடைய அணுசக்தி நடவடிக்கைகள் எல்லாமே ஆக்கப்பூர்வமானவை என ஈரான் வலியுறுத்தி வந்தது.

ஃபக்ரிஸாதே எப்படிக் கொல்லப்பட்டார்

மொஹ்சென் ஃபக்ரிஸாதே கடந்த வெள்ளிக்கிழமை டெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் அப்சார்ட் எனுமிடத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

மொஹ்சென் ஃபக்ரிஸாதேவுக்கு என்ன நடந்தது என ஈரான் கூறும் விளக்கம், பெரிய அளவில் மாறி இருக்கிறது. அவர் பயணித்த காரின் மீது சரமாரியாக தோட்டாக்கள் துளைத்தபோது மொஹ்சென் ஃபக்ரிஸாதே உயிராபத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு காயமுற்றார் எனத் தோன்றுகிறது.

தாக்குதலின் போது, ஒரு நிஸான் பிக்-அப் டிரக்கில், ஒரு குண்டு வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

முதலில், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் பாதுகாவலர்களுக்கும், சில ஆயுதம் தாங்கியவர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக, ஈரானின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.

தீவிரவாதிகள் என்று கூறப்பட்ட மூன்று முதல் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், அதை ஒருவர் பார்த்ததாகவும் ஈரானிய அரசின் அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

தற்போது, மொஹ்சென் ஃபக்ரிஸாதே ரிமோட் வழியாக இயக்கப்படும் இயந்திரத் துப்பாக்கியால் கொல்லப்பட்டார் அல்லது செயற்கைக் கோள் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆயுதத்தால் கொல்லப்பட்டார் என ஈரானின் ஊடகங்கள் கூறுகின்றன.

மொஹ்சென் ஃபக்ரிஸாதே மீது நடத்தப்பட்ட தாக்குதல், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தால், சிறப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது என, ஈரானின் ரியர் அட்மிரல் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான ஷம்கானி நேற்று (30 நொவம்பர் 2020) கூறி இருந்தார்.

“மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த கொலைத் திட்டம் மிகவும் சிக்கலானது. சம்பவ இடத்தில் யாருமே இல்லை. மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்பது ஈரானின் உளவுத் துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குத் தெரியும். அவ்வளவு ஏன், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூட கணித்து இருந்தோம். இந்த தாக்குதலுக்கு ஈரான் அரசுக்கு எதிரான முஜாஹிதீன்-இ-கல்க் மற்றும் இஸ்ரேல் நாடுதான் காரணம்” என, மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் இறுதிச் சடங்கின்போது ஷம்கானி கூறியுள்ளார்.

மொஹ்சென் ஃபக்ரிஸாதேவின் கொலைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என, இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை அமைச்சர் எலி கோஹென், நேற்று வானொலி நிலையம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

“அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற ஈரானின் ஆசையை வளர்த்து எடுத்தார் மொஹ்சென் ஃபக்ரிஸாதே. இது உலகத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. உலகம் இஸ்ரேலுக்கு நன்றி கூற வேண்டும்” என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, பெயர் குறிப்பிடாமல் ஓர் இஸ்ரேலிய உயர் அதிகாரி கூறியதாகத் தெரிவித்திருந்தது.

இயந்திரத் துப்பாகிகள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் துப்பாக்கிகள் எல்லாம், மத்திய கிழக்கு நாடுகளில் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் செய்தியொன்று தெரிவிக்கின்றது.

தொடர்பான செய்தி: அணு விஞ்ஞானி ஃபக்ரிஸாதே படுகொலை; பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவிப்பு: பின்னணி என்ன?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்